Thursday, January 3, 2019

முன்னாள் நிதியமைச்சருக்கும், இந்நாள் நிதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், மின்சக்தி, வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாயக்காவிற்கும் இடையில், கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவித்துள்ளன.

நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே, இவ்விருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த மாதம் 15 ஆம் திகதி பாரிய கடனை செலுத்தி முடிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளதாக கூறினார். இந்த கடன் தொகை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், பெறப்பட்ட கடனாகும். இந்த கடன் தொகையின் 83 சதவீதம் மஹிந்த தரப்பினர் பெற்றது என கூறிய மங்கள சமரவீர, இந்த கடனை செலுத்த தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக கடனை பெற தீர்மானித்துள்ளதாக, தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட மின்சக்தி, வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய சேமிப்பு வங்கியில் கடனை பெற்றால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்னை ஏற்படும், எனவும் அந்த தீர்மானத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும் எனவும் கூறினார். இதனை அடுத்து அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதேநேரம் சுகாதாரா அமைசர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில், நிதி அமைச்சர் ஒருவர் இருக்கும் போது, அவரது செயல்பாடுகளை விமர்சிப்பது முறையற்ற நடவடிக்கை எனவும், நிதியமைச்சரின் தீர்மானத்திற்கமைய செயல்படுமாறும் கோரினார்.

No comments:

Post a Comment