Sunday, January 6, 2019

மைத்திரி- மஹிந்த- சந்திரிக்கா கூட்டணியை இணைத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவோம் - தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை இணைத்துக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வ்வாறு கூறினார்.

“நாடாளுமன்றில் இன்று பெரும்பான்மையல்லாத ஒரு அரசாங்கமே இருக்கிறது. இதில் அனைவரும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர்கள் பல்வேறு வழிகளில் செயற்படுகிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஞாபகமில்லாமல் இருக்கிறது.

இதிலிருந்து மீண்டுவர வேண்டுமாக இருந்தால், பொதுத் தேர்தலுக்கு சென்றே ஆக வேண்டும். ஸ்திரமில்லாத அரசாங்கத்தால் இனியும் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது.

இதன் காரணமாக, பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தேர்தலொன்றுக்கு சென்றே ஆக வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறிய அவர், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் இணையப்போவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment