அரச நிறுவன தலைவர்களின் தகுதி குறித்து சோதனை.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் அண்மையில் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை நியமிக்கப்பட்டது. 29 அமைச்சர்களைக் கொண்ட இந்த அமைச்சரவையில் தமக்கு வாக்குறுதி அளித்தபடி, உரிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவில்லையென, பலர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட சகல அரச நிறுவன தலைவர்களின் தகுதி குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அரச தலைவர்களின் தகுதி குறித்து ஆராய்வதற்கென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்த குழுவினரின் அறிக்கை கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களின் உயர் நியமனங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது செல்வாக்கை கொண்டு, வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, தாம் இந்த குழுவை நியமித்ததாக, கூறியுள்ளார்.
எனினும் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தமது கீழுள்ள நிறுவனக்களின் உயர் அதிகாரிகளை நியமிக்க அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டே அமைச்சர்கள் உயர் அரச தலைவர்களை நியமிக்கின்றனர். இந்த நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறுக்கிட்டு, அவர்களது தகுதி, அனுபவம் குறித்து எப்போதும் இல்லாதவாறு ஆராய்வது, அமைச்சர்களின் பலத்தை அபகரிக்கும் செயல் என, அரசாங்க தரப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த விடயம் குறித்து தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அனைத்து அமைச்சர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment