Wednesday, January 9, 2019

தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் மனநிலை, மஹிந்தவிடம் இல்லை - பந்துல

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் மனநிலையில் இல்லையென ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். .

நிறைவேற்று அதிகாரம், நிலையான ஆட்சி, மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்தையும் தன்  பக்கம் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏன், தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முடியவில்லையென அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

யுத்தத்தின் பின்னர், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. யுத்தத்தின் பின்னர் நாடு, நாட்டு மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்து செயற்படக் கூடிய பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

யுத்தம் யாரால் ஒழிக்கப்பட்டது என்பதை புறம்தள்ளி, யுத்தத்திற்கு பின் தேசியம் என்ற ரீதியில் எவ்வாறு சவால்களுக்கு முகம் கொடுப்பது என்று அனைவரும் சிந்திருக்க வேண்டும்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணவும், அதற்கான அடித்தளத்தை இடவும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. இதனை நிறைவேற்ற தெற்கில் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் நிலையாக இருந்தது, மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அவர்களின் கைகளிலேயே இருந்தன.

இவை எல்லாவற்றையும் விட, நாடு குறித்து சிந்தித்து பொதுப்படையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் மக்கள் இருந்தார்கள். அப்போதைய தலைவர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக இருந்திருந்தால், மக்களே பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆனால் அரசாங்கம் தமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்கான அரசியலமைப்பினை, குடும்பத்தின் எதிர்க்காலத்திற்காக மாற்றி, கடந்த கால அரசாங்க தரப்பு, 17 ஆம் திருத்தத்தை திருத்தி 18 ஐ கொண்டு வந்தனர்.

எனவே, தற்போதுள்ள தலைவர்களும் அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம், எவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணாமல், மக்கள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்” என பந்துல லால் பண்டாரிகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment