பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நொச்சியாகம, ஜயகம நீர்விநியோக செயற் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்யும் பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை வித்திப்பதன் ஊடாக விவசாயிகள் பாரிய அளவில் வெங்காய செய்கையில் ஈடுபவர்கள் என்றும் அவர் கூறினார். இதனால் பெரிய வெங்காய விவசாயிகள் நன்மை அடைவார்கள்.
அத்துடன், பாசிப்பயறு, கௌபி போன்ற ஏனைய தானியங்களை இறக்குமதி செய்வதற்கும் எதிர்காலத்தில் வரையறை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் பி.ஹரிசன் இதன் போது குறிப்பிட்டார். இதனிடையே பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும் நிலை உருவாகியுள்ளதாக கடந்த வருடத்தில் வியசாயிகள் கவலை தெரிவித்திருந்தார்கள். அப்போது பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலை வழங்கப்படவில்லை என்று குறித்த விவசாயிகள் கவலை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
வரட்சி மற்றும் மழையுடனான வானிலை, பெரிய வெங்காய இறக்குமதி, செய்கைக்கான செலவு ஆகிய காரணிகளால் விவசாயிகள் பெரும் சிரமத்தை பருவம் தோறும் எதிர்கொள்கின்றார்கள். அத்துடன் கடந்த போகத்தில் செய்கையிடப்பட்ட பெரிய வெங்காயத்தின் தொகை, இரு மடங்காக குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தமையும் நினைவு கூறத்தக்கது. ஆகவே பெரிய வெங்காய செய்கையுடன் தொடர்புபட்ட காரணிகளில் விவசாய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
No comments:
Post a Comment