Thursday, January 17, 2019

கூட்டு ஒப்பந்தம் குறித்த விசேட மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

கூட்டு ஒப்பந்தத்தை நீக்கவோ அல்லது கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது என்று குறிப்பிட்டு, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம்,. உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே, அதனை முடிவுறுத்த முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், உடன் ரத்துச் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.

இந்த கூட்டு ஒப்பந்தம் தொழிற்சட்டங்களுக்கு முரணானது என்பதாலும், அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதாலும் இதனை ரத்துச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே தமக்கான வேதனம், 1000 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால், தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பெருந்தோட்ட மக்கள் பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டில் அண்மைக் காலமாக நிலவிய அரசியல் குழப்ப நிலையினால், கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் சற்று தளம்பிய நிலையில், தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com