இலங்கையின் குற்றவாளிகள் பட்டியலில் 608 சிறுவர்கள் இடம்பிடித்துள்ளதாக, குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பட்டியலில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொலை, கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் அடக்கிய ஐ.ஆர்.சி. பட்டியல் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் 13 சிறுமிகளும் அடங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வருடத்திலும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 100 சிறுவர்கள் உள்ளடக்கப்படுவதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 11 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இந்த பிரிவினர் சைக்கிள், மடிக்கணினி, கணினி திருட்டு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஐ.ஆர்.சி பட்டியலில் 1200 பெண்கள் உட்பட்ட 43,000 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக பொலிஸ்மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் இவர்கள் பாரிய குற்றங்களை புரிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வீட்டுச் சூழல் பிள்ளைகளு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. வீட்டு வறுமை நிலை, வீட்டில் போதியளவு மேற்பார்வையின்மை, மகிழ்ச்சியற்ற மனநிலையுடைய பெற்றோர், தந்தை மது போதைவஸ்து பாவிப்பவராயிருத்தல் போன்ற காரணங்களால் சிறுவர்கள் மன இறுக்கம், உணர்ச்சி வசப்படல் போன்றவற்றிற்கு ஆளாகி உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் சில வேளைகளில் மன அதிர்ச்சிக்கு உட்பட்டு அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் கூடுதலாக சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தவறுகளையே செய்ய முற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள்.
மன உளைச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு சிறுவர்கள் மத்தியில் உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வு ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒட்டு மொத்தத்தில் சிறுவர்கள் எதிர் கொள்கின்ற உள, சமூக பிரச்சினைகளை குறைப்பதற்கு அவர்களை குடும்பச் சூழலிலும் , சமுதாயத்திலும் வைத்துப் பராமரிக்கப்படுவது மிகப் பிரதானமானது. அத்துடன் சிறுவர்களுடன் பணியாற்றுபவர்கள் சுகாதார , பாரம்பரிய , சமய, கல்வி சார் அமைப்புக்கள் மற்றும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சட்ட ரீதியாக செயற்படுகின்ற வேளையில் சிறுவர்களை பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்பதுடன், சிறுவர்கள் குற்றமிழைப்பதும் தடுக்கப்படும் என்பதே உண்மையாகும்.
No comments:
Post a Comment