5 உடன்படிக்கைகள் பிலிப்பைன்ஸுடன் கைச்சாத்து
பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின்போதே இரு அரச தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
முதலாவதாக இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கைச்சாத்திட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையினை மேம்படுத்துதல் பற்றிய உடன்படிக்கை கைச்சாத்தானது. அடுத்ததாக இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாயத் துறையின் ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சராக மைத்ரிபால சிறிசேன 2008ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அப்போதைய விவசாயத் துறை செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இன்று ஜனாதிபதியாக அவரது முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை விசேட அம்சமாகும். அதன் பின்னர் கல்வித் துறையை மேம்படுத்துதல் பற்றிய புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா இதில் கைச்சாத்திட்டார்.
இலங்கையின் விவசாய ஆராய்ச்சி கொள்கைகள் சபைக்கும் பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான விவசாய தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. தேசிய விவசாய ஆராய்ச்சி கட்டமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பட்டப்பின் படிப்பு பாடநெறிக்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இலங்கை அரசாங்கம் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா இந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார்.
0 comments :
Post a Comment