Tuesday, January 15, 2019

சீனாவிடம் 300 மில்லியன் கடன் பெறும் இலங்கை - Reuters வெளியிட்டது செய்தி

சர்வதேச கடன் தரப்படுத்தலில் தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இலங்கை, சீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு தயாராவதாக 'ரொய்ட்டர் ' இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சீனாவிடம் கடன் பெறுவது தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தமது உறுதிப்பாட்டை வழங்கினார். எனினும், சீன வங்கியொன்றில் இருந்து 300 மில்லியன் கடனை பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதுடன், குறித்த கடன் தொகையை 1000 மில்லியன் டொலராக அதிகரிக்கும் இயலுமை உள்ளதாகவும் ''ரொய்ட்டர் '' வெளியிட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி கூறினார். இதனிடையே, இலங்கை இந்த வருடத்தில் பாரிய தொகை வௌிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியுள்ள நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னர் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டிய இறுக்கமான சூழ்நிலையில், மீண்டும் சீனாவிடம் கடன் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இலங்கையின் பொருளாதார மந்த நிலையை எளிதாக கணிக்க கூடியதாக அமைகின்றது.

ஜனவரி 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வௌிநாட்டவர்கள் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 3600 மில்லியன் ரூபாவை நீக்கிக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் கணிப்பின்படி, வௌிநாட்டு முதலீட்டாளர்களின் 753 மில்லியன் ரூபா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்து 4353 மில்லியன் ரூபா நிதி வௌியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடத்தில் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 160 பில்லியன் ரூபா நீக்கிக்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றே. இவற்றை கொண்டு நோக்குமிடத்து, 2018 டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது நாட்டில் காணப்பட்ட வௌிநாட்டு இருப்பு 6936 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com