தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் உத்தியோகபூர்வ முறையில் இணையாமல், கட்சியிலுள்ள சிலரை இணைத்துக் கொள்வதன் மூலம் இலக்கை அடைய முடியாது என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுவதே. அதற்காக சிறு கட்சிகளுடன் இணைந்து கொள்வதன் ஊடாக தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது. அதுமாத்திரமன்றி இவ்வாறு செயற்பட அரசாங்கத்துக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது. ஆனால் மூன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது.
19 ஆவது திருத்தச் சட்ட வரையறையின்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 எனவும், பிரதி, இராஜாங்க, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 70 எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியுள்ளார். இதன் மூலம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரையறையிலிருந்து அரசாங்கம் வெளியேறுவதற்கே முயற்சிக்கின்றது என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment