Friday, December 14, 2018

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந்

கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெடிகுண்டு இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பே ஏற்படும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர் தா. ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில் பிரதேசத்தினதும், மக்களினதும் நலன்சார்ந்த பல விடயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தவிசாளர் வேழமாலிகிதன் சபையில் பேசுவது ஒன்று நடைமுறையில் செய்வது ஒன்று, சபையின் செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து எல்லா உறுப்பினர்களையும், எல்லா வட்டாரங்களை சமமாகவும், ஒரே மாதிரியும் நோக்காது தனது கட்சி அரசியலை பலப்படுத்துவதனை நோக்காக கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார். அவ்வாறே இந்த வரவு செலவு திட்டத்திலும் பல குறைப்பாடுகள் உண்டு.

சபையில் உள்ள எதிர்தரப்பு உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டிய கோரிக்கை விடுத்த விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர்

இந்த பிரதேசமும் இங்கு வாழ்கின்ற மக்களும் ஏராளமான தேவைகளுடன் காணப்படுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டம் அந்த தேவைகளில் ஒரு பகுதியேனும் அடுத்த ஆண்டுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு காணப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை. அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச வருமான நிதி மூலங்கள் தொடர்பில் குழப்பங்கள் காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வரி வருமான மிக குறைந்தளவு காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதனால் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com