Wednesday, December 5, 2018

பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய சேவைகளுக்கு இடையூறு ஏற்றபடாதவாறு செயற்படுவீர். அரச ஊழியர்களுக்கு மைத்திரி

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும் உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார்.

இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட கருத்திட்டங்களும் 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முதன்மை செயற்திட்டமான கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்வரும் வருடம் வலுவுடன் நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள கிராமசக்தி ஒருங்கிணைப்பாளர்கள் தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மரநடுகை செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை சாதகமாகக்கொண்டு அச்செயற்திட்டத்தை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதுடன், குறுகிய காலத்திற்குள் அடைந்துள்ள அதன் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட காலமாக உரியவாறு கவனம் செலுத்தப்படாத வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குறிப்பிடத்தக்க வகையில் செயற்பாடுகளை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என தெரிவித்தார்.

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன், நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவர், முதலில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com