எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற விடுங்கள் - யாழில் பெண்கள் ஊர்வலம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர்-25 முதல் டிசம்பர்- 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினம் வரை அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மேற்படி தினங்கள் குறித்து பெண்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையம் [ஜெசாக் ] முன்னெடுத்துள்ள “எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை(07) யாழில் இடம்பெற்றன.
யாழ்.நகரிலுள்ள பிரதான பஸ் நிலைய முன்றலிலிருந்து ஆரம்பமான மௌன ஊர்வலம் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தினைச் சென்றடைந்தது.
இந்த மெளன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “பெண்களுக்கான வன்முறை என்பது மனித நேயத்தின் பற்றாக்குறை”, ”எனது கனவு ஒரு வன்முறையற்ற சமூகம்”, “மகிழ்வான வேலைத்தள சூழலுக்கூடாக ஆரோக்கியமான சூழலினை உருவாக்குவோம்” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாவலர் கலாசார மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பானது.
அதிதிகளின் உரைகளுடன் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதி ஊடாக யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்,நீதிமன்றம்,பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
பாறுக் ஷிஹான்
0 comments :
Post a Comment