Monday, December 31, 2018

புத்தாண்டில் அரசாங்கம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும்.. வாசுதேவ நாணயக்கார..

நாளை பிறக்கவுள்ள 2019 ஆம் ஆண்டு, அரசாங்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் எதிர்ப்பார்க்கும் சலுகைகளை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை. நாளுக்கு நாள் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் தேர்தலுக்கு தயாராகும் ஒரு வருடமாகவே இருக்கிறது.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டும் என பெரிதும் முயற்சிக்கிறார். அந்த அரசியலமைப்பு நிச்சயம் பெரும்பான்மையினத்தவர்களின் சம்மதத்தை பெறுவது சாத்தியமற்றது.

அத்துடன் தேர்தலை நடத்தாமல் இருக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இது குறித்து பல ஊடகங்களுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து விட்டு, ஜனநாயகத்தை வென்று விட்டதாக மார்த்தட்டிக்கொள்கிறது.

எனினும், மக்கள் ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பையே இவர்கள் வென்றுள்ளார்கள் என்பதுவே உண்மையாகும்.

இந்த நாட்டில் இன்று ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாது போயுள்ளது.
ஜனநாயகம் தொடர்பில் அனைத்துத் தரப்பிடமும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இதனாலேயே, மக்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்று, வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என, வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com