Thursday, December 6, 2018

இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக்கொள்கின்றாராம் சபாநாயகர். கெஹெலிய காட்டம்.

“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,

“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார்.

இக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துள்ளார்.

பாராளுமன்றை கூட்டியமை சபையை ஒத்தி வைத்தமை விஷேட யோசனைகளை முன்வைக்கவுமே எனினும் சபாநாயகர் விருப்பமானவர்களுக்கு விருப்பமான முறையில் பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு இடமளித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஊடக செயற்பாடு குறித்தே பேசினர். ஊடக செயற்பாடுகளை தடை செய்யுமாறே கூறினார்.

இதனால் சபாநாயகர் அனைத்து அரச ஊடக நிறுவன தலைவர்களையும் பாராளுமன்றிற்கு அழைப்பதற்கு உத்தரவிட்டார். இது தான் இவர்களது ஊடக சுதந்திரமாகும்.

நேற்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் கூட ஏனைய நாட்களைப் போலவே அமைந்திருந்தன. அந்த செயற்பாடுகள் சட்ட விரோதமானவை.

சட்டவிரோதமாக செயற்படுகின்ற பாராளுமன்றிலேயே அனைத்து உரைகளும் இடம்பெற்றன. பாராளுமன்றம் கூட்டுவது மற்றும் யோசனைகளை ஒத்தி போடுகின்றனர்.

ஓத்திவைப்பு வேளை பிரேரணை என்ற பெயரில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உரையாற்றினர். எனக்கு தெரிந்த வகையில் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்றிற்கு சென்றனர்.

எமது ஆட்சி காலத்தில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் எந்த வித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெற்றன.

அதில் தலையிடுவதற்கோ அழுத்தம் கொடுப்பதற்கோ நாம் இடமளிக்கவில்லை என்பதை சகலரும் அறிவர். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்களின் குழு ஒன்று ஊடக நிறுவனங்களுக்கு சென்றிருந்தது.

பாராளுமன்றம் சம்பிரதாயங்களையும் நிலையியற் கட்டளைகளையும் மீறியே செயற்படுகிறது.”என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com