Saturday, December 15, 2018

மஹிந்த ராஜபக்ஸ ராஜனாமா!

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று காலை தனது பிரதமர் பதவியை ராஜனாமா செய்து கொண்டுள்ளார். விஜேராம இல்லத்தில் நடைப்பெற்ற சர்வமத அனுஸ்டனங்களுடன் தனது நெருக்கமானவர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் :

பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை எனக்கில்லை.

பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்து இயக்கிக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க மறுப்பு தெரிவிக்குமாயின் பாராளுமன்றில் ஐ.தே.க பெரும்பான்மையை இழக்க நேரிடும்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் ஐ.தே.க 20.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.

நாங்கள் நாட்டின் அபிவிருத்திக்காகவே கடன் வாங்கினோம். அது அனைவருக்கும் தெரிந்த விடயமே ஆனால் அவர்கள் கடன் வாங்கியது தேவயைற்ற செயற்பாடுகளுக்காக. இந் நிலையில் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்கின்ற பட்சத்தில் மிகுதியிருக்கும் காலத்தில் எவ்வளவு தொகையை கடனாக பெறுவார்கள் எனத் தெரியவில்லை.

டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பின் போட்டதைப் போன்று பாராளுமன்றத் தேர்தலையும் இந்த அரசாங்கம் பிற்போடும்.

அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரா நாயக்க குமாரதுங்கவிற்கு தெரியாமலேயே விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன் படிக்கையில் ரணில் கைச்சாத்திட்டார். அதே போல ஜனாதிபதிக்கு தெரியாமலேயே பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எதிர்காலத்தில் செய்யக் கூடும்.

ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே பிரதமர் பதவியை இராஜினாமா செய்து கொள்கின்றேன்.

பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.

பொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலும் தீர்மானங்கள் எடுக்கும் போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, இன்றாகும் போது ஒரு வருடமும் மூன்று மாதங்களால் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே.

தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்போடுவதற்கே அவர்கள் திட்டுமிடிகின்றார்கள் என்று மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com