Saturday, December 8, 2018

கிழக்கின் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதேன்? வடக்கில்போல் வழங்குவீர் உடனடியாக நியமனத்தை.

தீர்வு கிடைக்காவிடின் காலவரையறையற்ற போராட்டம் வெடிக்குமாம். எச்சரிக்கின்றார் தன்னானந்த தேரர்


வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கும் போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க ஆளுநர் ரோகித போகல்லாகம நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலையற்ற ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தன்னானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இறுதியாக நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டி பரீட்சையில் 40 புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற வடக்கு மாகாண பட்டதாரிகள் சிலருக்கு 3 ஆம் கட்டமாக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நியமனம் அண்மைக்காலமாக வழங்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. எனவே இதனை போன்று கிழக்கு மாகாணத்திலும் ஆளுநர் ரோகித பொகல்லாகம இவ் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

யுத்தம் சுனாமி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வேலையற்றுள்ள வடக்கு கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாகாண சபையின் ஊடாக வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.

இந்த விடயத்தை கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.

ஆனால் வடக்கில் கட்டம் கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டு வருவதை வரவேற்கின்றோம். எனினும் கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் நியமனம் வழங்குவது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அகமட் காலத்தில் எமது பட்டதாரிகள் பலருக்கு தகைமை இருந்தும் இந்நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஆளுநர் மேற்கொள்ளாது பட்டதாரிகளின் திறமை, ஆண்டு, நடந்து முடிந்த போட்டி பரீட்சை அடிப்படையில் குறித்த நியமனத்தை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற நிலையில் தகைமைப்புள்ளிகளை பெற்ற பலர் முன்னாள் முதலமைச்சரினால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். எனவே கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இவ்விடயத்தில் கவனம் எடுப்பது நன்று.

இப்பரீட்சைக்கு ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் தோற்றியுள்ள நிலையில் வெறும் 400க்கும் உட்பட்டவர்களே தெரிவாகி இருந்தனர். ஆனால் 2 ஆம் 3 ஆம் கட்டம் தகைமை உள்ளவர்கள் இப்பதவிக்கு உள்ளீர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பெயர்களை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பியும் எதுவித பதிலும் இதுவரை இல்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
அவ்வாறு இல்லாவிடின் 40 புள்ளிகளை பெற்ற அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் குறித்த நியமனங்களை வழங்குதல் வேண்டும் இதில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளின் பிரச்சனைகள் உள்ளன.

அவ்வாறு இல்லாவிடின் நாங்கள் சாத்வீகமான போராட்டம் ஊடாகவே தான் எமக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment