பிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தொடர்ந்தும் பார்த்துக்கெண்டிருக்க முடியாது - உறுப்பினர் மோகன்ராஜ்
கரைச்சி பிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஐயாத்துரை மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சட்டத்திற்கும், சுற்று நிருபங்களுக்கும், நடைமுறைகளுக்கும் மாறாக பல விடயங்கள் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதனை நாமும் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. எனவே இவ்வாறான செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
நாம் மக்களுக்கு பொறுப்புச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். சபையும் மக்களுக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது எனத் தெரிவித்த மோகன்ராஜ்.
சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் வழங்குதல். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் விடயத்தில் சபையின் செயற்பாடுகள், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், சபையின் நிதிப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கரைச்சி பிரதேச சபை சட்டதிட்டங்களுக்கு புறம்பாக செயற்பட்டு வருகிறது. எனவே இச் செயற்பாடுகள் தொடர்பில் இனியும் நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சபை மக்கள் நலன்சார்ந்து சட்டத்திட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தவறும் பட்சத்தில் நாம் மக்கள் மத்தியில் இவ்விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment