ரணில் விக்ரமசிங்க குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்
மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பாட்டில் கம்பஹாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார். ரணில் விக்ரமசிங்க எந்த ஜனநாயகத்தை பாதுகாத்தார்.
சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டார். சீனர்களுடன் கைகோர்த்துக் கொண்டார்.
அன்று அவருக்கு ஜனநாயகம் தெரியவில்லை. அவர் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றிலும் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றை கேளிக்கையிடமாக பயன்படுத்தினார்.
எனினும், இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் கதைக்கின்றார். ரணில் பொறுப்புடன் செயற்படவில்லை. இன்று ஜனநாயகத்தின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார்.
கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது ரணில் செய்படுகின்றார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையிலே இடம்பெற்ற சமாதானப்பேச்சுகளிலிருந்து புலிகள் வெளியேறியபோது, அதற்கு காரணமாக ரணிலை சாடிய புலிகளின் அரசியல் ஆலோசர் ரணில் விக்கிரமசிங்க ஓர் குள்ளநரி என குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
No comments:
Post a Comment