Tuesday, December 25, 2018

கூட்டமைப்பு எம்பி க்கள் மூவரிடம் இரட்டைகுடியுரிமை. பதவி பறிக்க நீதிமன்று செல்கின்றது தாமரை மொட்டு.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

'இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

ஆனால் அதனை இரகசியமாக வைத்திருக்கிறோம். புத்தாண்டில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

2015 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட போது, கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

ஆனால் அவர்களின் பெயர்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போதே அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

அதே சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com