Tuesday, December 18, 2018

எதிர் கட்சி தலைவர் பதவியை எவ்வாறு மஹிந்தவிற்கு வழங்க முடியும் கேட்கின்றார் சுமந்திரன்.

மஹிந்த ராஜபக்சவை எதிரர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்றில் பேசிய அவர்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எப்படி எதிர்கட்சியாகும் என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியை விட்டு விலகி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சி ஒன்றில் உத்தியோகபூர்வமாக இணைந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரிமை பெற முடியும். இது இரண்டும் எனது கேள்விகளாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாதென்பதனை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும் என சுமந்திரன் கூறியபோது குறித்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆராய்ந்த பின்னர் முடிவு வழங்கப்படும் என அறிவித்துளளார்.

இதேநேரம் அங்கு தொடர்ந்து, உரையாற்றிய சுமந்திரன்:


நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று செய்த தவறை இனியொருமுறை செய்யாதிருக்க நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதே ஒரே வழிமுறை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் இனவாத செயற்பாடுகளை மக்கள் உதறித் தள்ளியுள்ளனர். எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க எந்த மக்களுக்கும் விருப்பம் இல்லை. இந்த நாட்டில் எவரும் இரண்டாம் தரப்பு மக்கள் அல்ல. அனைவரும் சமமானவர்கள். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் அது தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும். பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட எமது மக்கள் அனைவரும் இனவாதத்தை எதிர்த்துவிட்டனர்.

சகல மக்களும் சமமானவர்கள் என்பதை எமது மக்கள் நிருபித்துள்ளனர். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் இந்த விடயத்தை கருத்தில்கொள்ள வேண்டும். இப்போது நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அதனை நழுவவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com