Monday, December 31, 2018

தங்களுக்குள்ளேயே எதிரியை தேடுவார்கள் - சூளுரைத்தார் மஹிந்த அமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோல்வியுறவைப்பதற்கு புதிய கட்சியில் கூட்டு சேர்ந்தவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டால் மாத்திரமே முடியும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய நாளில் பங்கெடுத்த நிகழ்வொன்றில் அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்தார்.

பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் இழக்க வேண்டி நேர்ந்தது. நாம் எதிர்க் கட்சியில் அமர்ந்தால், ஏனைய அனைவரும் எம்முடன் இணைந்து கொள்வதாகவே முன்னர் கூறப்பட்டது. ஆகவே சம்மந்தப்பட்ட
உறுப்பினர்கள் மீண்டும் எமது கட்சியில் இணைந்துகொள்வார்கள் என்பது கட்சியின் எதிர்பார்பாகும். நாம் புதிய கட்சியை நாடவேண்டியது இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் தமது அங்கத்துவத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிலர் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டபின்னர் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் என்று கூறிவருகின்றார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் எவரும்; மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தல் ஒன்றில் போட்டியிடப் போவதில்லையென பல இடங்களில் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் எதிர்வரும் தேர்தலில் இந்த வேறுபாடு தெளிவாக விளங்கப் போகின்றது. இப்போது பொது எதிரியை எதிர்ப்பதற்காக ஒன்று திரண்டுள்ளவர்கள் தேர்தலின்போது தங்களுக்குள்ளேயே எதிரியைத் தேடும் நிலைமை உருவாகும். இதுதான் உண்மையான நிலைப்பாடாகும் என்றும் மஹிந்த அமரவீர மஹிந்த அணியினரை விமர்ச்சித்துள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com