இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் கொண்டுள்ள நிலைப்பாட்டிலேயே சவூதியும் உள்ளது.
உலக இஸ்லாமியர்களின் மூன்று புனித ஸ்தளங்களில் ஒன்று மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். அங்கிருந்துதான் ரசூலுல்லாஹ் அவர்கள் புனித மிஹ்ராஜ் பயணம் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள பாலஸ்தீன புனித பூமியை யூதர்களிடமிருந்து மீட்பது உலகின் அனைத்து முஸ்லிம்களினதும் கடப்பாடாகும்.
அந்தவகையில் யூதர்களிடமிருந்து பாலஸ்தீனை மீட்பதற்காக உலகின் சில இஸ்லாமிய நாடுகள் அதிக அக்கறை காட்டிவருகின்றது. அதில் ஈரான் காட்டிவருகின்ற தியாகங்கள் மிகப்பெரியது.
இதற்காக ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினை பயிற்றுவித்து ஆயுத, பொருளாதார உதவிகளையும் நீண்டகாலமாக ஹிஸ்புல்லாஹ் இயக்கத்துக்கு ஈரான் செய்து வருகின்றது.
அதுபோல் அங்கு யூதர்களின் நவீன ஆயுத தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்தவாறு யூத இராணுவத்துக்கெதிராக களத்தில் நின்று போராடுகின்ற ஹமாஸ் இயக்கத்துக்கும் ஆயுத, பொருளாதார உதவிகளை ஈரான் வெளிப்படையாக செய்து வருகின்றது.
ஆனால் இஸ்லாத்தின் காவலர்கள் என்று தங்களை உலகுக்கு காண்பிக்கின்ற சவூதி அரசாங்கமானது, யூதர்களுடன் போரிடுகின்ற ஹமாஸ் இயக்கம் மற்றும் ஏனைய ஜிஹாத் இயக்கங்களுக்கும் எந்தவித இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்வதில்லை.
யூதர்களுடன் நல்லுறவினை பேணிவருகின்ற மிதவாதிகளான அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு மாத்திரம் இஸ்ரேலின் அனுமதியுடன் நிதி உதவிகளை அவ்வப்போது சவூதி அரசு செய்துவருகின்றது.
இந்த நிதியினை வழங்குவதன் மூலம் முழு பாலஸ்தீனுக்கும் சவூதி அரேபிய அரசு உதவி புரிவதாக எடுத்துக்கொள்ள முடியாது.
யூத தேசத்தினை அங்கீகரிக்காததும், அமெரிக்காவுக்கு இசைந்து நடந்துகொள்லாமல் இறுக்கமான போக்கினை கடைப்பிடிப்பதுமே ஹமாஸ் இயக்கம் மீது சவூதி அரசு வெறுப்பாக இருப்பதற்கு காரணம் என்று நம்பப்படுகின்றது.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு கட்டார் நாட்டுக்கு எதிராக திடீரென சவூதியும், அதன் நேச நாடுகளும் பொருளாதார தடையினை விதித்திருந்தது.
அதில் சவூதி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டானது இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு கட்டார் அரசு உதவி வருகின்றது என்றும், குறிப்பாக ஹமாஸ் இயக்கத்திற்கு நிதி உதவி செய்து வருவதுடன், ஹமாஸ் இயக்க தலைவர்களுக்கு கட்டாரில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி குற்றம்சாட்டியது.
சற்றும் எதிர்பாராத சவூதி அரேபியாவின் திடீர் பொருளாதார தடை விதிப்பினால் கட்டார் சிறுது நிலைகுலைந்தது. உடனடியாக அந்நாட்டுக்கு உதவுவதற்காக துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் முன்வந்து செயலில் இறங்கின. இதனை சவூதி அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சவூதியின் இந்த செயல்பாடானது உயிர் நண்பன் அமெரிக்காவையும், கள்ள உறவினை பேணிவருகின்ற இஸ்ரேலையும் திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மத்தியகிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத்தளம் கட்டார் நாட்டிலேயே அமைந்துள்ளது. அப்படியிருந்தும் சவூதி, கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலையின்போது அமெரிக்கா நடுநிலை வகிக்காமல் அல்லது சமரசம் செய்ய முற்படாமல் நேரடியாக சவூதி அரசுக்கே தனது ஆதரவினை வழங்கியது.
சியோனிஸ்டுகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், புனித பூமியை மீட்பதற்காகவும், தங்கள் உயிர்களை தியாகம் செய்து புனித போர் செய்துவருகின்ற இஸ்லாமிய ஜிஹாதிய இயக்கங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் கூறி அவர்களை தடை செய்ததுடன், படை நடவடிக்கைகள் மூலம் அவர்களை அழித்து வருகின்றார்கள்.
அதே நிலைப்பாட்டினையே சவூதி அரசும் எடுத்துவருகின்றது. அவ்வாறாயின், சவூதி அரசுக்கும், இஸ்லாமியர்களின் எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையில் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது. அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் எண்ணங்களை சவூதி அரச குடும்பத்தினர் நிறைவேற்றி வருகின்றார்கள்.
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
0 comments :
Post a Comment