Thursday, December 27, 2018

ஏழுகோடி ஆட்டையைப் போட்ட அரசியல் ஆசாமிக்கு பிணை!

காசோலை மோசடி குற்றச்சாட்டில், குற்றத்தடுப்பு பிரிவின் வணிக குற்ற விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்ட மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் இன்று கல்கிஸை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை 25 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று வீட்டு வளாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, 70 மில்லியன் ரூபாவுக்கான செல்லுபடியற்ற காசோலையை வழங்கினார் என்று வணிகர் ஒருவர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதேநேரம் ஜனநாயக மக்கள் முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக் கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கட்சியின் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அம் முன்னணி அறிவித்துள்ளது.

மேலும், சகல பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உப தலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com