Thursday, December 13, 2018

நீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா? வை எல் எஸ் ஹமீட்

பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா? பதில்: ஆம்

அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மையாக “ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? பதில்: இல்லை

பாராளுமன்றத்தைக் கலைத்தது பிழை எனத்தீர்ப்பு வந்தால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவும் மக்கள் “ ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி, மஹிந்த தரப்புடன் கலந்தாலோசனை நடாத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சட்டத்தின் நிலைப்பாடு என்ன?

அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஒன்று சரத்து 85இன் கீழ். இது binding referendum ( கட்டுப்படுத்தக்கூடிய சர்வஜனவாக்கெடுப்பு) எனவும் அடுத்தது சரத்து 86 இன் கீழ் non-binding referendum ( கட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ) எனவும் அழைக்கப்படும்.

Binding Referendum

இது அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்துவதற்கு 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும்; எனப்படும் வாக்கெடுப்பாகும்.

அதாவது, அமைச்சரவை சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடுவதாக தீர்மானிக்கின்ற, அல்லது உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று தீர்மானிக்கின்ற எந்தவொரு சட்டமூலமும் முதலில் 2/3 ஆல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் அதற்காக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பை நடாத்தாவிட்டால் அல்லது அதில் வெற்றிபெறாவிட்டால் அத்திருத்தம் சட்டமாகாது. இதனாலேயே இது ‘ கட்டுப்படுத்தும் வாக்கெடுப்பு’ எனப்படுகிறது. ( binding, non binding என்ற சொற்கள் அரசியலமைப்பில் இல்லை. ஆனால் பொதுவாக அவ்வாறுதான் அழைக்கப்படுகின்றன ).

Non-binding Referendum



இது ஜனாதிபதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் கருதும் எந்தவொரு விடயத்தையும் மக்கள் அபிப்பிராயத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றிற்கு விடுவதற்கானதாகும். இது மக்களின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி அறிந்துகொள்ள உதவுமேதவிர வேறு எதையும் செய்யாது. இதற்கு அமைச்சரவையினதோ, பாராளுமன்றத்தினதோ அனுமதி தேவையில்லை. ஜனாதிபதியே தீர்மானிக்கலாம்.

அவ்வபிப்பிராயத்திற்கிணங்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அது சட்டத்திற்கமைவாகவே செய்யப்பட வேண்டும். மக்கள் ஆம் என்று அபிப்பிராயம் தெரிவித்தற்காக சட்டத்திற்கு அப்பால் எதையும் செய்துவிட முடியாது.

பாராளுமன்றம் 41/2 வருடம் முடிவடையாமல் கலைக்கப்பட முடியாதென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் 41/2 வருடத்திற்குமுன் கலைக்க முடியாது; என்பதுதான் சட்டம்; என்பது அதன் பொருளாகும். எனவே, மக்கள் “ ஆம்” என்றுதான் வாக்களித்தாலும் சட்டப்படிதான் நடவடிக்கையெடுக்க வேண்டும். எனவே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அல்லது சட்டத்தைத் திருத்த வேண்டும். அதற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும்.

இதன் சட்டத் தத்துவத்தைப் பார்ப்போம்

அதிகாரம் அடிப்படையில் மக்களுக்குரியது. அந்த அதிகாரத்தை மக்கள் அரசியலமைப்பினூடாக அரசிற்கு வழங்கி அதைப் பாவிக்கின்ற முறையையும் அதில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதற்கமைவாகத்தான் அதைச் செயற்படுத்த முடியும்.

ஒரு சாதாரண சட்டத்தை கொண்டுவர அல்லது திருத்த சாதாரண பெரும்பான்மை, அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்த 2/3 பெரும்பான்மை, இன்னும் சில சரத்துக்களைத் திருத்த 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

41/2 வருடத்திற்கு முன் கலைக்க முடியாது; எனத் தீர்ப்பு வந்தால் 2/3 ஆல் பாராளுமன்றம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் அல்லது சட்டத்தை திருத்தவேண்டும்; கலைப்பதற்கு. சட்டத்தைத் திருத்த 2/3 ஆல் முதலில் அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். உயர்நீதி மன்றம் சர்வஜன வாக்கெடுப்பு தேவையென்றால் அதன்பின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும். சரத்து 70 (1)ஐத் திருத்துவதற்கு பெரும்பாலும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது.

எனவே, சுருங்கக் கூறின் அரசியலமைப்பைத் திருத்தாமல் 41/2 வருடத்திற்குமுன் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதற்கு முதல் கட்டமாக என்ன என்ன சரத்துக்களை எவ்வாறு திருத்தப்போகின்றோம்; என சட்டமூலம் கொண்டுவரவேண்டும். 2/3 ஆல் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லலாம். 2/3 ஆல் அவ்வாறு ஒரு சட்டமூலம் நிறைவேற்றாமல் வெறுமனே வாக்கெடுப்பு நடாத்த முடியாது. இதுதான் கட்டுப்படுத்தும் சர்வஜன வாக்கெடுப்பு . ( சரத்து 85)

கட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ( சரத்து 86 ) ஜனாதிபதி எப்போது விரும்பினாலும் நடாத்தலாம். ஆனால் அதற்கு எதுவித சட்டத் தத்துவமுமில்லை.

இங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம். மக்கள்தானே இறைமையுடையவர்கள். அவர்கள்தானே “ கலையுங்கள்” என்று அனுமதி கொடுக்கின்றார்கள். எனவே, கலைக்கமுடியாதா? என. இதற்குப் பதில் திட்டவட்டமாக “ முடியாது “ என்பதாகும்.

ஏனெனில் இந்த மக்கள் கலைக்கலாம் என்று தம் அபுப்பிராயத்தைத் தெரிவிக்கின்றார்கள்; என்பது உண்மை. அதன்பொருள் சட்டத்தை ஒதுக்கிவிட்டு அல்லது சட்டத்தை மீறி செய்யுங்கள்; என்பதல்ல. சட்டத்திற்குட்பட்டு தாராளமாக செய்யுங்கள் அல்லது அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்ட முறைப்படி சட்டத்தைத் திருத்திவிட்டு செய்யுங்கள்; என்பதாகும்.

மறுதலையாக இந்த சர்வஜன வாக்கெடுப்பின் பொருள் சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு செய்யுங்கள் என்பதான ஒரு நோக்கம் இருந்திருந்தால் அது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் நாளை ஜனாதிபதி “ இந்த அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவருவோமா?” எனக்கேட்டு ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தினால் மக்கள் ஆம் என்றால் தற்போதைய யாப்பைத் தூக்கிவீசிவிட்டு ஜனாதிபதி தாமாக ஒரு யாப்பை உருவாக்க முடியுமா? முடியாது.

எனவே, மக்கள் ஒன்றை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்களே தவிர சட்டத்திற்கு வெளியே செய்யுங்கள்; என்று கூறவில்லை. மட்டுமல்ல, இங்கு தெரிவிக்கப்படுவது அபிப்பிராயம் அல்லது சம்மதமே தவிர “ ஆணை” அல்ல. ஏனெனில் சரத்து 86இல் அவ்வாறு எந்த ஆணை பற்றியும் குறிப்பிடப்படவில்லை. மட்டுமல்ல, 86 இருக்கின்ற அதே யாப்பில்தான் 85 ம் இருக்கின்றது. சட்டத்தை திருத்துவதற்காகத்தான் அது இருக்கின்றது. எனவே, 86 ஐக் கொண்டு சட்டத்தைத் திருத்த முடியாது.

19வது திருத்தத்திற்குமுன் இன்னொரு சர்வஜனவாக்கெடுப்பும் இருந்தது. அது 85(2) இல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஒரு சாதாரண சட்டமூலம் ( அரசியலமைப்பைத் திருத்துவதற்கானதோ அல்லது அரசியலமைப்பிற்கு முரணானதாகவோ அல்லாததாக இருத்தல் வேண்டும்) ஏதோவொரு காரணத்தால் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் ஜனாதிபதி தனது தற்றுணிவு அதிகாரத்தில் அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடலாம். இந்த உப சரத்து இப்பொழுது நீக்கப்பட்டு விட்டது.

பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தையே இப்பொழுது வாக்கெடுப்புக்குவிட முடியாதபோது சட்டமூலமே இல்லாமல் ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றமுடியுமா?

எனவே, 85 இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒரு சட்டமூலம் வேண்டும். அது 2/3 ஆல் நிறைவேறப்படவேண்டும். 86இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவ்வாறு எதுவும் தேவையில்லை. ஜனாதிபதி விரும்பினால் நடாத்தலாம். மக்கள் அபிப்பிராயத்தை அறியலாம். அதனால் மக்கள் அபிப்பிராயத்தை அறிதல் என்பதற்குமேல் வேறு பிரயோசனம் இல்லை. எதைச் செய்வதாயினும் சட்டப்படிதான் செய்யவேண்டும்.

எனவே, ஜனாதிபதி பாராளுமன்ற கலைப்புத் தொடர்பாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பைத் தாராளமாக நடாத்தலாம். எந்த சட்டத்தடையுமில்லை. ஆனால் அதைவைத்து பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியாது. கலைத்தால் மீண்டும் இதே நிலை ஏற்படும்.

வாக்கெடுப்பு நடாத்தும் முறை

இந்த இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பையும் பொறுத்தவரை வாக்கெடுப்பு வெற்றிபெறுவதற்கு முதலாவது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% வீதத்திற்கு மேற்பட்டோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.

சிலவேளை வாக்களித்தோர் 2/3 பங்கிற்கு மேற்படவில்லையாயின் அதாவது 2/3 இற்கு குறைவானோர் வாக்களித்தால் அவர்களுள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 பங்கிற்கு குறைவில்லாதோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.

உதாரணமாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் ஒரு கோடி நாற்பது லட்சத்திற்கும் அதிகமென நினைக்கின்றேன். இலகு கணிப்பிடுதலுக்காக ஒரு கோடி இருபது லட்சமெனக் கொள்வோம்.

இவர்களில் எண்பது லட்சத்துக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% இற்கு மேல் ஆதரித்திருக்க வேண்டும்.

சிலவேளை வாக்களித்தவர்கள் எண்பது லட்சத்திற்கும் குறைவானால் அதாவது 70 லட்சம், 60 லட்சம் அல்லது 50 லட்சமானல் ஆதரித்தவர்களின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 1/3 பங்கிற்கு குறையாமல் இருக்கவேண்டும்.

உதாரணமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் ஒரு கோடி இருபது லட்சம். அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 50 லட்சம்; எனில் பதியப்பட்ட வாக்கின் 1/3 ஆனது 40 லட்சமாகும். எனவே, 50 லட்சம் வாக்களித்தவர்களுள் 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஆதரித்தால் மட்டும்தான் அது செல்லுபடியாகும்.

சுருங்கக்கூறின் பதியப்பட்டோர் ஒருகோடி இருபது லட்சமெனில் நாற்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரித்தால் மட்டும்தான் அது வெற்றிபெறும்.

இவ்விருவகையான வாக்கெடுப்பும் சரத்து 87 இற்கமைய உருவாக்கப்பட்ட சட்டம் Act No 7 of 1981 இற்கைமைய தேர்தல் ஆணையகத்தினால் நடாத்தப்படும்.

இலங்கையில் இதுவரை நடாத்தப்பட்ட ஒரேயொரு சர்வஜன வாக்கெடுப்பு

இந்த சர்வஜன வாக்கெடுப்பு சரத்து 85 இன் கீழான ( கட்டுப்படுத்தும்) சர்வஜன வாக்கெடுப்பாகும். இது 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு கொண்டுவரப்பட்ட நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்காக நடாத்தப்பட்டது.

இது இடைக்கால ஏற்பாடான ( transitional provision) சரத்து 161 ( e) ஐத் திருத்துவதற்கானதாகும். இதனைத் திரும்பும்போது இது சரத்து 62(2) இல் தாக்கம் செலுத்தியது. சரத்து 62(2) ஒரு entrenched provision ஆகும். அதாவது சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுகின்ற ஒரு சரத்தாகும்.

எனவே, இந்த நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்தை 2/3 ஆல் நிறைவேற்றியபின் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சட்டமாக்கப்பட்டது. 86 இன் கீழ் இதுவரை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒரு கதை அடிபட்டது நடத்தபலபோவதாக, ஆனாலம் நடக்கவில்லை.

எனவே, மைத்திரி இன்னுமொரு பிழை செய்யப்போகிறாரா?.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com