Monday, December 31, 2018

கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை !

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை படையினரிடம் இருந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மிக நீண்ட நாட்களாக பல்வேறு முறைகளில் நில மீட்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்களின் போராட்டங்கள் நியாயமாக இருக்கின்ற போதிலும், இவர்களது வாழ்விடங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இன்னும் வெற்றி பெறவில்லை. அத்துடன் அரசியல் தலைவர்கள் தமிழ்ப் பிரதிநிதிகள் என ஒட்டுமொத்த உயர்மட்டங்களும் மக்களது சொந்த நிலங்களை, மீண்டும் மக்களிடம் கையளிக்கும் செயற்பாட்டில் சிரத்தைஎடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் பகிரங்கமாக கூறி வருகிறர்கள்.

இதனிடையே, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மக்களது காணிகளை இந்த வருடத்திற்குள் வழங்குவேன் என்று கொடுத்த வாக்குறுதியும் பொய்த்து போய்விட்டதா? என்ற ஆதங்கத்தில் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றை கேப்பாப்புலவு மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக்கடிதம் பின்வருமாறு அமைகின்றது..................

கேப்பாப்புலவை பூர்வீகமாகக் கொண்ட நாம், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ்நிலங்களை இராணுவத்தினர் அபகரித்திருப்பதால், அவற்றினை விடுவிக்கக்கோரி 670 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது எமது சொத்துக்களை இழந்து நிர்க்கதியான நிலையில், எங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தோம். பின்னர் யுத்தம் நிறைவடைந்ததும் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டோம்.

அரசினால் ஜனநாயக வழியில் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் எமது கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளேயே 10 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.
எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டுமென பல வடிவங்களில் உரிமைக் குரல் கொடுத்தோம். அரசு பாராமுகமாக இருக்க, எமது வாழ்விடத்தை நாமே பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

கடந்த 2017.03.01 அன்று " எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும்'' என அகிம்சை வழிப் போராட்டத்தை தொடந்தோம். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் எமது போராட்டத்திற்கான முழுமையமையான நிரந்தர தீர்வை இதுவரை பெற்றுத்தரவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனை தருகிறது.

நாம் அரசிற்கோ இராணுவத்தினருக்கோ தேசிய நல்லிணக்கத்திற்கோ எதிரானவர்கள் இல்லை. எமது வாழ்விடங்களில் மீள்குடியேறி நின்மதியாக சுதந்திரமாக எங்களால் வாழமுடியவில்லை என்பதால், இந்த போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதை தாங்களும் சர்வதேசமும் அறிந்த உண்மை.

எமது போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 303 நாட்கள் ஆனபோது, 104 குடும்பங்கள் அவர்களுக்கு உரித்தான காணி மற்றும் பொது உரிமைகளோடு மீள்குடியேற்றப்பட்டனர். இதற்கு எங்களது நன்றிகள்.

ஆனபோதிலும், மேலும் 104 குடும்பங்களின் சுமார் 71 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்தக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மழை, வெய்யில், பனி, நுளம்புத்தொல்லை என எதையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் தெருவோரத்தில் கிடக்ககும் எமக்கு ஒரு தீர்வும் இல்லை.

இந்தநிலையில், ஜனாதிபதி இந்த வருடத்தின் இறுதிநாளான டிசெம்பர் 31க்குள் சகல மக்களின் காணிகளும் கையளிக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

எமது வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்படுவோம் என்று காத்திருந்தபோதும் காணிகள் விடுவிப்பு பட்டியலில் எமது வாழ்விடம் தொடர்பில் குறிப்பிட்டிருக்கவில்லை !

எனவே, இனியும் காலம் தாழ்த்தவோ பேராடக்கூடிய நிலையிலோ நாம் இல்லை என்பதை மன வருத்தத்தோடு அறித்தருகிறோம்.

ஆகவே அடுத்துவரும் நாட்களில் எமது பூர்வீக நிலங்களில் எமது சொந்த விருப்பத்துடன் மீள்குடியேறவுள்ளோம். இதன்போது இராணுவத்தினரால் எமக்கு இடையூறு ஏற்பட்டால், நாட்டின் தலைவரும் முப்படைகளின் தலைவருமான ஜனாதிபதியே பொறுப்புக்கூறவேண்டும் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com