ஆறடிக்குள் மஹிந்த தன்னை குடும்பத்துடன் புதைப்பார் என்றது தேர்தல் மேடைக்கதையாம்! மைத்திரி நீண்ட செவ்வி
கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார் எனக் கூறியது அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவிர அதில் எந்த உண்மையும் இல்லை.
என்னைக் கொல்வதற்கு ராஜபக்ஷ முயற்சித்தமைக்கான எந்த அறிக்கையும் இல்லை. அது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் மேடைகளிலேயே அதனைக் கூறினேன் என சிரித்தவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கேள்விகளும் பதில்களும் வருமாறு:
கேள்வி: உங்களுடைய செயற்பாட்டால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது?
பதில்: அப்படி ஒன்றும் இல்லை. நாடு அராஜக நிலைமைக்கு செல்லவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. வன்முறைகளோ, பிரச்சினைகளோ இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கேள்வி: நீங்கள் அப்படிf் கூறினாலும் ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவை பெரும்பாலான மக்கள் விமர்சிக்கின்றார்களே?
பதில்: அப்படியானால் ரணில் விக்கிரமசிங்க நாட்டை அழிப்பதற்கு நான் இடமளித்திருக்கவேண்டுமா? இவர்களின் ஊழல்களைப் பார்த்துக்கொண்டு நான் குருட்டுத்தனமாக இருந்திருக்கவேண்டும் என்கிறீர்களாக நான் அந்த விடயங்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன். எனக்கும் ரணிலுக்குமிடையில் பிரச்சினைகள் இருந்தது ரகசியமானதல்ல. கடந்த மூன்று வருடங்களாக பல ஆரோக்கியமற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. சதித்திட்டங்கள், ஊழல்கள் இடம்பெற்றன. இந்த அரசியல் குழப்பத்தை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்படுத்தினார். நான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றியிருக்கின்றேன்.
கேள்வி: மூன்றரை வருடங்கள் கடக்காமல் இதற்கு முன்னரே நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?
பதில்: நான் பொறுமைகாத்து வந்தேன். ஐ.தே.க. முன்னணிக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். என்னுடைய அதிகாரங்களையும் விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவர் (ரணில்) என்னுடைய அதிகாரங்களையும் பயன்படுத்தினார்.
கேள்வி: உங்கள் அதிகாரங்களை விட்டுக்கொடுத்ததை நினைத்து கவலை அடைகிறீர்களா?
பதில்: இல்லை. ஆனால் யாரிடம் அதிகாரங்கள் செல்கின்றன என்பதை பார்க்கவேண்டும்.
கேள்வி: உங்களின் இந்த முடிவுக்கு உடனடி காரணம் என்ன?
பதில்: எனக்கெதிரான கொலை சதி முயற்சி,
கேள்வி: நீங்களும் கோத்தபாயவும் இணைந்து செயற்பட்டதால் உங்களை கொல்ல சதி செய்யப்பட்டதாக நாமல் குமார கூறினார். அவ்வாறான பேச்சுக்கள் ஏதும் இடம்பெற்றதா?
பதில்: அதனை நீங்கள் நாமல் குமாரவிடம்தான் கேட்கவேண்டும்.
கேள்வி: ஆனால் மக்கள் இதனைத்தான் கூறுகின்றனர். உங்களை கொல்வதற்கான சதி உண்மையெனில் கதையின் மறுபக்கமும் வெளிவரவேண்டுமல்லவா?
பதில்: அது தொடர்பில் எனக்குத் தெரியாது. நாமல் குமாரதான் அதனைக் கூறியிருக்கின்றார். அதனால் அவரிடமே விளக்கம் கேட்கவேண்டும்.
கேள்வி: இது தொடர்பான விசாரணையில் நீங்கள் திருப்தி அடையவில்லையா?
பதில்: ஆம், நான் முழுமையாக விசாரணை தொடர்பில் அதிருப்தியடைந்தேன்.
கேள்வி: விசாரணைகளை யார் தடுத்தார்கள்?
பதில்: சம்பந்தப்பட்டவர்கள்தான், அதனால்தான் அவர்களை பதவி நீக்கினேன். இவ்வாறான நிலைமைகளே இதற்கு காரணமாகின.
கேள்வி: நீங்கள் பொலிஸ்மா அதிபரை குற்றம்சாட்டுகின்றீர்களா?
பதில்: ஆம். அவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன. தற்போது அவரும் விசாரிக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிவதற்கு முன்னர் அதுதொடர்பில் அவர் எப்படி முடிவுக்கு வரமுடியும்.
கேள்வி: சி.ஐ.டி. அதிகாரி நிசாந்த சில்வாவின் மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்ட இரண்டு கடிதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: ஆம். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும். அவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி: முதலில் ரணிலை நீக்கி மஹிந்தவை பிரதமராக நியமித்தீர்கள், பின்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தீரகள், இறுதியாக கலைத்தீர்கள் சற்று விளக்க முடியுமா?
பதில்: புதிய அரசாங்கம் வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஏனைய கட்சி பாராளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பிக்க முற்பட்டன. இந்த நிலையில் பாராளுமன்றம் செல்ல முடியாது. அதனால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கேள்வி: எனினும் உங்களது அரசாங்கத்தால் பெரும்பான்மையை காட்ட முடியாதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில்: அவர்களிடம் பெரும்பான்மை பலத்தை முறையாக காட்டுமாறு கோரியிருக்கின்றேன். முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் அரசியலமைப்பை மீறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
கேள்வி: சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டுகின்றது. நீங்களும் அதனை கூறுகின்றீர்களா?
பதில்: இல்லை நான் அவரை விமர்சிக்கவில்லை. அது தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும்.
கேள்வி: அப்படியானால் சபாநாயகர் தொடர்பில் உங்களிடம் முறைப்பாடு இல்லை.
பதில்: என்னுடைய கருத்தின்படி 14 ஆம் திகதி சபாநாயகரினால் நிலையியல் கட்டளைகள் முறையாக பின்பற்றப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.
கேள்வி: சபாநாயகர் நிலையில் கட்டளைகளை மீறுவதாக ஆளும்கட்சி கூறுகிறது. அப்படியானால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரலாம் தானே?
பதில்: சபாநாயகர் நிலையியல் கட்டளையை மீறவில்லை. வாக்கெடுப்பானது மூன்று முறைகளில் நடத்தலாம். தற்போது அவர்கள் அதனை செய்கிறார்கள்.
கேள்வி: நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றால் மஹிந்த தீர்மானம் எடுப்பார் எனக் கூறியிருந்தீர்கள், அதன் மூலம் நீங்கள் அர்த்தப்படுத்தியது என்ன?
பதில்: பெரும்பான்மையை காட்டும் தரப்பிற்கு அரசாங்கம் அமைக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அதுதான் அரசியலமைப்புக்குட்பட்ட நடவடிக்கையாகும்.
கேள்வி: அப்படியானால் மஹிந்த பதவி விலகுவாரா?
பதில்: அந்த முடிவைய அவர்தான் எடுக்கவேண்டும். முதலில் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிடின் பெரும்பான்மையைக் காட்டும் தரப்பிற்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும். அது ஜனநாயக மரபுமட்டுமல்ல. அரசியலமைப்பு ரீதியானது.
கேள்வி: மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: அப்படி நடந்தால் எவ்வாறு பணியாற்றுவது என்று அவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவேன்.
கேள்வி: ஆனால் ரணிலுடன் பணியாற்றமாட்டேன் என்று கூறியிருக்கின்றீர்களே?
பதில்: அதனை நான் முன்னர் கூறினேன், தற்போதும் கூறுகிறேன், எதிர்காலத்திலும் கூறுவேன். ரணில் விக்கிரமசிங்கவுடன் பணியாற்ற முடியாது.
கேள்வி: ஐ.தே.மு. பெரும்பான்மையை நிரூபித்து ரணிலைத்தான் பிரதமராக்கவேண்டும் என்றால் என்ற செய்வீர்கள்?
பதில்: ஒரு தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்கின்றது என்பதற்காக குறிப்பிட்ட ஒருவரைத்தான் பிரதமாரக்கவேண்டும் என்று ஏற்பாடுகள் எதுவும் இல்லை. பிரதமராகப் போகின்றவர் ஜனாதிபதியின் இணக்கத்தையும் பெறவேண்டும்.
கேள்வி: உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை இதில் காட்டுவதுசரியா?
பதில்: நான் தனிப்பட்ட பிரச்சினைகளை கையாள்வதாக கூறுவபவர் ஒரு முட்டாளாகவே இருக்கவேண்டும்? ரணிலின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை இலங்கைக்கு பொருந்தாது. அவர் உள்நாட்டு கைத்தொழில், விவசாயம் என்பவற்றை கவனத்தில் கொள்ளமாட்டார். வெளிநாட்டவர்களுடனான காணிக்கொடுக்கல் வாங்கல்கள் ஊழல்மிக்கவையாகவே உள்ளன.
கேள்வி: கருவும் சஜித்தும் உங்கள் மேல் நம்பிக்கையில்லாதன் காரணமாகவே பிரதமர் வாய்ப்பை மறுத்தார்களா?
பதில்: அவர்கள் மீது ரணில் மீதுள்ள பயத்தினாலேயே மறுத்தார்கள்.
கேள்வி: இந்த நிலைமை நீடித்து உங்களால் பிரதமரை நியமிக்க முடியாவிடின் இந்த நாட்டுக்கு என்னநடக்கும்?
பதில்: இந்த நிலைமைகள் விரைவில் சீராகிவிடும். யாரும் இதுதொடர்பில் கவலையடையவேண்டாம்.
கேள்வி: கருவும் சஜித்தும் மறுத்ததால் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தீர்கள், அது சரியான முடிவா?
பதில்: காரணம் வேறுயாரும் இருக்கவில்லை.
கேள்வி: உங்கள் உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக நீங்கள் கூறிவந்தீர்கள், அப்படி குற்றம்சாட்டிய ஒருவரை நீங்கள் பிரதமராக நியமித்துள்ளீர்களே?
பதில்: அது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் மேடைகளிலேயே அதனைக் கூறினேன். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது பாரிய சதி
கேள்வி: கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஆறடி குழிக்குள் இருந்திருப்பீர்கள் என்று கூறியிருந்தீர்களே?
பதில்: என்னைக் கொல்வதற்கு ராஜபக்ஷ முயற்சித்தமைக்கான எந்த அறிக்கையும் இல்லை. அவை அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்.
கேள்வி: மஹிந்தவை பிரதமராக நியமிக்க எவ்வளவு காலம் சிந்தித்தீர்கள்?
பதில்: இரண்டு வாரங்கள்
கேள்வி: மஹிந்தவுடன் சிறப்பாக வேலைசெய்ய முடியும் எனக் கருதுகின்றீர்களா?
பதில்: அதனை தற்போது கூற முடியாது. திருமணம் தொடங்கும் போது அது எப்படியிருக்கும் என்று கூற முடியாது. திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்றபின்னரே அந்த வாழ்க்கை குறித்து கூற முடியும்.
கேள்வி: நீங்கள் அனைத்து விடயங்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றீர்களா?
பதில்: நான் எதற்கும் பதற்றம் அடைவதில்லை. நாட்டில் அராஜகமும் இல்லை. வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. பிள்ளைகள் பாடசாலை செல்கின்றார்கள். மக்கள் தமது தொழில்களை செய்கின்றார்கள். அமைச்சுக்கள் தொழில் பெறுகின்றன. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றார்கள். அப்படியானால் அராஜகம் எங்கே இருக்கிறது.
கேள்வி: எனினும் சர்வதேச ரீதியில் நன்மதிப்பு இழக்கப்படுகின்றதா? இதுவரை எந்தநாடும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. எந்தவொரு வெளிநாட்டு பிரதமரை சந்திக்கவில்லையே?
பதில்: அது ஒரு தவறான கருத்து. அதிகமான வெளிநாட்டு தூதுவர்களை நான் சந்தித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் 70 இராஜதந்திரிகளை சந்தித்தேன். ஐ.நா. பிரதிநிதியையும் சந்தித்தேன். நாம் தனிமைப்படுத்தப்படவில்லை.
கேள்வி: நான் உங்களை கூறவில்லை. உங்களால் நியமிக்கப்பட்ட பிரதமரை யாரும் சந்திக்கவில்லையே?
பதில்: காலப்போக்கில் அது சரியாகிவிடும். இந்த விடயங்கள் பாராளுமன்ற குழப்பங்கள் எல்லாம் பல நாடுகளில் இடம்பெறுகின்றன. இது இலங்கையில் மட்டும் இடம்பெறவில்லை. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவைப் பாருங்கள். அங்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
கேள்வி: நீங்கள் செய்த விடயங்களுக்காக மக்கள் ஆணையைப் பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தலாமே?
பதில் : எனக்கு இன்னும் ஒருவருடம் இருக்கும்போது நான் ஏன் முட்டாள்தனமான முடிவை எடுக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் உடனடியாக ஒருபோதும் நடத்தப்படமாட்டாது.
கேள்வி: அடுத்தவருடத்திற்கான பட்ஜட் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. மக்கள் எப்படி இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்.
பதில்: அதுதொடர்பில் கவலை வேண்டாம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அனைத்துப் பிரச்சினைகளும் இந்த மாத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும்.
கேள்வி: . இந்த நாட்டின் உயர் இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதி என்ற வகையில் என்ன செய்யப்போகின்றீர்கள்?
பதில்: இது நீதிமன்றம் முன்வைத்துள்ள விடயம் நான் ஒன்றும் கூறக்கூடாது.
கேள்வி: அவர் இன்னும் இந்தப் பதவியை வகிக்க முடியுமா?
பதில்: அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும். நீதிமன்ற முடிவின் அடிப்படையிலேயே எனது முடிவுகள் இருக்கும்.
கேள்வி: உங்களுக்கு எதிரான கொலை சதி விவகாரத்தில் சரத் பொன்சேகா உங்களை விமர்சித்து பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: நான் பொன்சேகா போன்று செயற்பட முடியாது. விசாரணைகள் இடம்பெறுகின்றன. தேவையானால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேள்வி: 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில்: அந்த நாள் வரும்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
கேள்வி: நீங்கள் செய்வதற்கு அதிக பணிகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தீர்களே ?
பதில்: ஆம் செய்வதற்கு இன்னும் பல பணிகள் உள்ளன.
கேள்வி: பாராளுமன்ற கலைப்பு குறித்த வர்த்தமானியை மீளப்பெறப்போகின்றீர்களா?
பதில்: அதனை என்னால் செய்ய முடியுமா என்று விசாரிக்கவில்லை.
கேள்வி: உங்கள் தரப்பிற்கு பெரும்பான்மை இருப்பதாக கூறப்பட்டது. அந்த பெரும்பான்மைக்கு என்ன நடந்தது.?
பதில்: அதனை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.
கேள்வி: யார் அவர்கள்?
பதில்: இது ஒரு குழுவாக பேசப்பட்ட விடயம். ராஜபக்ஷ தரப்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியது.
கேள்வி; உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவார்களா?
பதில்: அப்படி ஒரு எண்ணம் இல்லை. யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை.
கேள்வி: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்படுகின்றது? அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் நான் அதுதொடர்பான கோரிக்கையை பெற்றிருக்கிறேன். அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பியிருக்கிறேன்.
கேள்வி: துமிந்த சில்வாவிற்கும் பொது மன்னிப்புவழங்குமாறு கோரிக்கை வந்திருக்கின்றதா?
பதில்: இல்லை.
கேள்வி: அவ்வாறு கோரிக்கை வந்தால் பரிசீலிப்பீர்களா?
பதில்: எனக்கு அப்படியொரு கோரிக்கை வரவில்லை. வராமல் நான் எதுவும் கூற முடியாது.
கேள்வி: மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது.?
பதில்: அந்த விசாரணைகளை நிறுத்துமாறு ஐ.தே.க. எனக்கு அழுத்தம் கொடுத்தது. அவர்கள் இன்னும் அதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் தற்போது அழுத்தம் இல்லை. விசாரணைகள் தொடரும்.
கேள்வி: பாராளுமன்ற தேர்தல்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே முடிவா?
பதில்: ஆம். பாராளுமன்றத் தேர்தலுக்கு உடனடியாகவே செல்லவேண்டும். தேர்தல் நடந்தால் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள்.
0 comments :
Post a Comment