வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம், மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 424 பேர், சுமார் 32 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைகப்பட்டுள்ளதாக, மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக இதுவரை 472 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக தெரிவித்த அந்த நிலையம், அனர்த்தத்தின் போது இருவர் பலியானதாகவும் குறிப்பிட்டது.
இதேநேரம் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
0 comments :
Post a Comment