யாரை நம்புவது? ஒப்பந்தம் என்கிறது கூட்டமைப்பு, இல்லவே இல்லை என்கின்றது ஐ.தே.க.
பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவேண்டும் என நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியை நிபந்தனைகள் இன்றி ஆதரிப்பது, பக்கசார்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுகம் தமிழ் மக்களும் எதிர்ப்பை தெரிவித்தபோது, தாம் எழுத்துமூலமான ஒப்பந்தத்துடனே ஆதரவினை வழங்கியுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு ஊடகங்கள் எழுதித்தள்ளின.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், எழுத்து மூலமான எந்த உடன்படிக்கையும் இல்லை எனவும், நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை ரீதியான இணக்கப்பாடு மாத்திரமே இரண்டு தரப்புக்கும் இடையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் இரண்டு தரப்புக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமருக்கு ஆதரவான நம்பிக்கை தொடர்பான தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் சரத் பொன்சேகாவும் தலையிட்டிருந்தார்.
இதனடிப்படையில், இலங்கையை ஒற்றையாட்சி நாடாக முன்னெடுத்து செல்லுதல், தற்போது உள்ளப்படியே பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்தல், வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது ஆகிய கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதனை தவிர எழுத்து மூலமான எந்த உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் போலியான ஆவணம் வெளியாகியுள்ளது.
ரணில் - சம்பந்தன் உடன்படிக்கை மற்றும் யானை - புலி உடன்படிக்கை தொடர்பான கதைகளில் எந்த உண்மையுமில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment