பாதாள குழுக்களின் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சி செயல்படுகிறது..
நாட்டின் அனைத்து பாகங்களிலும் தற்போது அராஜகம் புகுந்துவிட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, இவற்றின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். நாட்டில் இடம்பெற்று வரும் பாதாள உலகக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவியளிப்பதாலேயே, அரசாங்கம் ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக, செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
பாதாள உலகக் குழுக்களின் வருகை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் அதிகமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதாள குழுக்களின் நடமாட்டம் இவ்வாறு இருந்ததில்லையென்று தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இந்த அவல நிலை தோன்றியதாக கூறினார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பாதாளக்குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக, செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று மக்களுக்கு பகலில் கூட வெளியில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பதிலை கட்டாயம் வழங்க வேண்டும். அத்தோடு, மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் ஆட்சியை அமைத்தவர்களுக்கு உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என அனைத்துத் தரப்பினருக்கும் இன்று உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அதனை மறுதலித்து வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஆட்சியைத் தக்க வைத்தக்கொள்வதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.
இந்த வருடத்தில் மட்டும் 50 கொலைகளும், சந்தேகத்திற்கு இடமான முறையில் சம்பவித்த ஆறு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, செஹான் சேமசிங்க கூறினார்.
0 comments :
Post a Comment