அரச பணிகளுக்கு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் மீது பாரபட்சம். சம்பந்தனின் பித்தலாட்டம் ஆரம்பம். பீமன்.
கிழக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவ உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப்பரீட்சையும் இடம்பெற்றுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், வெட்டுப்புள்ளிகள் இனரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்தகவல்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்கு 105 , முஸ்லிம்களுக்கு 120 , தமிழர்களுக்கு 130 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இன்றைய அரசியல் ஸ்திரத்தன்மையின்மையில் தள்ளாடும் வயதிலும் தளராது ரணில் விக்கிரமசிங்கேவிற்காக களமாடிக்கொண்டிருக்கும் திருமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிங்கமாக சீறிப்பாய்ந்து கிழக்கு மாகாண ஆழுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இவ்விடயத்தில் பாதக விளைவுகள் ஏதும் ஏற்படுமுன்னர் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆழுனரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐயா விடயம் தொடர்பாக காலோசிதமாக செயற்பட்டமை பாராட்டுதற்குரியது. எதிர்காலத்திலும் இவ்வாறு செயற்படவேண்டும். (அதாவது வருகின்ற தேர்தல் முடிந்த பின்னும்.) ஆனாலும் இக்கடிதத்தின் உள்நோக்கம் தொடர்பாக ஒரு சந்தேகமும் உள்ளது. அச்சந்தேகம் யாதெனின் திடீரென வேலையற்ற தமிழர்கள் மீது ஐயாவுக்கு அக்கறை ஏன் வந்தது என்பதுதான் அந்த சந்தேகம். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உடனடியாக அதன் மொழிபெயர்ப்பு தமிழ் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆக இது எதிர்வரும் தேர்தலுக்கான அதிரடி ஆட்டமா என்பதுதான் எனது நேரடிக்கேள்வி.
இனரீதியான பாகுபாட்டுக்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியிருப்பார்களாயின் அது முற்றுமுழுதான சட்டமீறலாகும். பாரபட்சத்திற்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்குவது என்பது அவர்கள் அரச சேவையில் இணைந்து கொள்ளும்போது மேற்கொண்ட 'எச்சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டேன'; என்ற உறுதி மொழியை மீறுவதாகும். அத்துடன் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இன ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயற்பாடுகளின் கீழ் பாரிய தண்டனைக்குரியவையாகவும் அமையலாம். எனவே இவ்விடயத்தில் உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால், ஆழுனருக்கு கடிதம் எழுதியதுடன் நிறுத்திக்கொள்ளாமல், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இவ்வாறான இன ஒடுக்குமுறைக்கு அல்லது பாரபட்சத்திற்கு எந்த அரச அதிகாரியும் துணியாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவேண்டும்.
பாராளுமன்றில் தங்களது வர்க்கத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவின் உரிமை மீறப்பட்டுள்ளதாக உணர்ந்தபோது, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் , பிரதமர் நியமனம், அமைச்சரவை நியமனம் என்பவற்றை வரலாற்றில் என்றும் நடந்திராத வகையில் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த சம்பந்தன் ஐயாவால் முடியுமென்றால், தனக்கு வாக்களித்த மக்களின் உரிமை மீறப்படுகின்றபோதும் நீதிமன்று செல்வதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொள்வதற்கும் முடியுமாக இருக்கவேண்டும்.
இரா சம்பந்தன் அவர்கள் ஆழுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதி.
10 டிசம்பர் 2018
கௌரவ.ரோஹித்த போகொல்லாகம
ஆளுநர்
கிழக்கு ஆளுநர்
ஆளுநர் செயலகம்
உவர்மலை
திருகோணமலை
கௌரவ ஆளுனர் அவர்கட்கு,
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக
மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
1. கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.
2. விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்ட போது,இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை. எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.
3. ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் 105
முஸ்லிம்கள் 120
தமிழர்கள் 130
4. ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு,இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்
5. அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது,வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில்,3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை
எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்
0 comments :
Post a Comment