ஐ தே க தேசிய அரசாங்கம் அமைக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்
ஐ தே கட்சி மு கா வுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாகவும் எதிர்வரும் 18ம் திகதி அமைச்சரவை விஸ்தரிப்புக்கான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் இன்றைய Sunday Times பத்திரிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம் அதை எதிர்க்கப்போவதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்ட நிலைப்பாட்டைப் பார்ப்போம்.
தேசிய அரசாங்கம் தொடர்பான வரைவிலக்கணம் சரத்து 46(5) இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ For the purpose of paragraph (4), National Government means, a Government formed by the recognized political party or independent group which obtains the highest number of seats in Parliament together with the other recognized political parties or the independent groups.”
அதாவது தேசிய அரசாங்கமென்பது பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி/ சு குழு ஏனைய கட்சிகள் அல்லது சு குழுக்களுடன் இணைந்து அமைக்கின்ற அரசாங்கமாகும்.
அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கின்றபோது 46(4) இன் பிரகாரம் அமைச்சர்கள், ராஜாங்க, பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும். சுருங்கக்கூறின் பாராளுமன்றம் தீர்மானித்தால் எத்தனைபேரையும் நியமிக்கலாம்.
கடந்தமுறை அமைந்த தேசிய அரசாங்க முன்னுதாரணம்
பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஐ தே கட்சி. எனவே, முதலாவது நிபந்தனை பூர்த்தி. ஏனைய கட்சிகள் / சு குழுக்கள் என்பதில் ஐ ம சு கூட்டமைப்பும் மு கா வும் இணைந்திருந்தது. த தே கூ, ஜே வி பி, ஈ பி டீ பி இணையவில்லை.
அதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சில கட்சிகள் இணைந்திருந்தன. சில கட்சிகள் இணையவில்லை. இதனை தேசிய அரசாங்கம் என அழைக்கமுடியுமா? என்பதுதான் இங்குள்ள கேள்வி.
இதற்குரிய விடை ‘ பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இணைய வேண்டுமா? அல்லது ஒரு சில கட்சிகள் இணைந்தால் போதுமா? ஒரு சில எனும்போது பெரிய கட்சியுடன் மேலதிகமாக ஒரு கட்சி இணைந்தாலும் போதுமா? என்ற கேள்விகளில் தங்கியிருக்கின்றது.
இந்த விடையை ஆராய்வதற்கு “ together with the other parties..” என்ற சொற்றொடரின் அர்த்தத்தை ஆராய வேண்டும். இங்கு “ with other parties “ என்று தரப்படவில்லை. “With the other parties “ அதாவது “ other” என்ற சொல்லுக்கு முன்னால் “ the “ என்ற சொல் பாவிக்கப் பட்டிருக்கிறது. இந்த the என்ற சொல்லுக்குரிய பொருள்தான் இதன் விடையைத் தீர்மானிக்கப்போகின்றது.
வெறுமனே “ other parties” என்று சொல்லியிருந்தால் அது “ஏனைய கட்சிகள் “ என்ற பொருளை வழங்கியிருக்கும். அது எல்லாக் கட்சிகளையும் குறிக்கின்றதா? அல்லது ஒரு சில கட்சிகள் என்றாலும் போதுமா? என்பதில் மாறுபட்ட வியாக்கியானங்களைக் கொடுக்கலாம். ஆனால் பாவிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் “ the other parties” ஆகும்.
“ The “ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘ definite article ‘ என அழைக்கப்படும். ( part of speech) அதாவது திட்டவட்டமானது என்பது அதன்பொருளாகும். ஆங்கிலத்தில் ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்னால் “ the “ என்ற சொல்லைப் பாவித்தால் அதன்பின் அது எது என்ற கேள்வி எழாது. திட்டவட்டமானது.
உதாரணமாக, That is a story book. அது ஒரு கதைப்புத்தகம். I bought the book in London. அந்தப் புத்தகத்தை லண்டனில் வாங்கினேன்; என்று சொன்னால் அதன்பின் ‘எந்தப் புத்தகத்தை?’ என்ற கேள்வி எழாது. ஏனெனில் அது முன்னர் குறிப்பிடப்பட்ட புத்தகம்.
அதேபோன்றுதான் உலகிலே ஒன்றே ஒன்று இருப்பதற்கும் ‘ the ‘ என்ற சொல் பாவிக்கப்படும். உதாரணமாக ‘ the Sun, the Moon, the Earth ‘. இங்கு எந்த சூரியன், எந்த சந்திரன் என்ற கேள்வி எழாது. அது திட்டவட்டம் என்பதைக் குறிப்பதற்காகத்தான் ‘ the ‘ என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு இந்த ‘ the ‘ பாவிக்கப்படுகின்ற பலமுறைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் குறித்த சொல்லின் திட்டவட்டமான தன்மையைக் குறிக்கின்றது.
இப்பொழுது நமது கேள்விக்கு வருவோம். “ other parties “ என்றால் அங்கு திட்டவட்டமான தன்மை இல்லை. இரண்டுபக்க வியாக்கியானத்திக்காகவும் வாதிடலாம். “ the other parties “ என்று வந்ததனால் ‘ ஏனைய கட்சிகள் ‘ என்பது திட்டவட்டமாகி விட்டது.
ஒரு சில கட்சிகள் என்றால் அவை எவை? அவை திட்டவட்டமானதல்ல. சகல கட்சிகளும் என்றால் அவை திட்டவட்டமானவை. அங்கு எந்தக் கட்சிகள் என்ற கேள்வி எழாது. எனவே, “ the “ என்ற சொல் பாவிக்கப்பட்டதால் அனைத்துக்கட்சிகளும் என்ற அர்த்தமே வழங்கப்படவேண்டும்.
அதேநேரம் “ அனைத்துக்கட்சிகளும்” என்றால் ஏன் “ அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சியுடன்” என்ற சொற்றொடர் பாவிக்கப்பட வேண்டும்? மாறாக அனைத்துக் கட்சிகளும் என்று கூறியிருக்கலாமே!
உதாரணமாக இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்தாலும் அது இந்த வரைவிலக்கணப்படி தேசிய அரசாங்கமாகாது. “ the other parties “ என்பது ஏனைய எல்லாக் கட்சிகளையும் குறிக்குமாயின் அதற்குள் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியும் வந்துவிடும். எனவே, தேசிய அரசாங்கம் அமைக்க முடியும். அவ்வாறாயின் ‘ அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் “ என்ற சொற்பதம் அர்த்தமற்றதாகிவிடும்.
இங்கு எந்தக்கட்சியில் இருந்து பிரதமர் வருகிறார் என்ற விடயத்தைக் குறிப்பதற்காகத்தான் ‘ அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன்’ என்ற சொற்றொடர் பாவிக்கப்பட்டது; என்றொரு வாதத்தைக் கொண்டுவரலாம். ஆனால் அதன்பொருத்தப்பாடு மிகவும் குறைவு. ஏனெனில் அது சரத்து 42(4) இன்படி யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்பதுடன் சம்பந்தப்பட்டதே தவிர எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்பதுடன் சம்பந்தப்பட்டதல்ல.
சிறிய கட்சியொன்றில் இருந்த பிரதமர் வருவதற்கு பெரிய கட்சி ஆதரவளிக்க முடியாது; என்று விதியில்லை. அது அவர்களது கட்சிகளோடு சம்பந்தப்பட்ட விடயம். அண்மையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆசனம் குறைவாகப்பெற்ற பிராந்தியக் கட்சியொன்றிலிருந்து முதலமைச்சர் வருவதற்கு கூடிய ஆசனங்கள் பெற்ற ( பெரும்பான்மை அல்ல) காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியது. இலங்கைக்கு வேறு சட்டம் என்றாலும் இது உலக நடைமுறை.
அவ்வாறு பெரிய கட்சியிலிருந்துதான் பிரதமர் வரவேண்டும் என்று பொருள்கோடல் வழங்கினால் “ the other parties “ என்பது ஏனைய அனைத்துக் கட்சிகளையும்தான் குறிப்பிடும்.
எனவே, பெரிய கட்சியுடன் ஏனைய கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால்தான் தேசிய அரசாங்கம் ஆகும்; என்றால் அடுத்த கட்சிகளுடன் கூட்டுச் சேரலாம்; ஆனால் பெரிய கட்சி இல்லாதவரை அது தேசிய அரசாங்கமாகாது. அதற்காக அனைத்துக் கட்சிகளும் இணையவேண்டும்; என்ற தேவையில்லை; என்பதே பொருளாகும்.
அதேநேரம் ‘ the ‘ என்ற சொல் draft இலுள்ள குறைபாடாகும். ‘ the ‘ என்பது ‘திட்டவட்டமான’ என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை; என்றும் பொருள் கோடல் செய்யவேண்டும். பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஒரு சொல் இன்னுமொரு சொல்லின் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் பொருள்கோடல் செய்த சந்தர்ப்பங்கள் உண்டு.
உதாரணமாக, ‘ may’ என்ற சொல் ‘ shall’ என்ற சொல்லின் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டதாக பொருள்கோடல் நீதிமன்றத்தால் செய்யப்பட்டிருக்கின்றது.
இவை எல்லாவற்றிற்குமேலாக, ஒரு தடவை எல்லாக்கட்சிகளும் இணையாமல் சில கட்சிகளை பாராளுமன்றம் தேசிய அரசாங்கமாக கருதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன்மூலம் ஒரு நடைமுறை உதாரணம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மட்டுமல்ல, பாராளுமன்றத்தின் தீர்மானத்தை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்த முடியாது.
எனவே, பெரிய கட்சியுடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் ‘ தேசிய அரசாங்கம்’ அமைக்க முடியும்.
ஐ தே கட்சியும் மு கா வும் தேசிய அரசாங்கம் அமைக்கமுடியுமா?
தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளாக ஐ தே கட்சியும் மு கா வுமே ஆட்சியமைக்கின்றன. UPFA கட்சியாக இணையவில்லை. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இணைகிறார்கள். எனவே பெரிய கட்சியுடன் “ ஏனைய கட்சிகள்” என்று பன்மைச்சொல் பாவிக்கப்பட்டிருப்பதால் “ மு கா” என்ற ஒரேயொரு கட்சி இணைந்தால் தேசிய அரசாங்கமாக அதனைக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுகின்றது.
வெளிப்படையில் அதை நியாயப்படுத்துவது சிரமமாகவே இருக்கின்றது. “ மு கா” என்ற ஒரு கட்சியை “ ஏனைய கட்சிகள் “ என்ற பன்மைப் பதத்திற்குள் கொண்டுவருவது ஏற்புடையதாக இருக்கமாட்டாது. ஆனால் சரத்து 46(5) இல் ஒரு சிறிய இடைவெளி இருக்கின்றது.
அதாவது, பெரிய கட்சியை வரையறுக்கும்போது “ பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியென்று” குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனையகட்சிகளைக் குறிப்பிடும்போது “ பாராளுமன்றத்தில் ஆசனம்பெற்ற” என்ற பதம் இல்லை. மாறாக “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்” என்று மாத்திரம்தான் இருக்கின்றது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பல மலையக, மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஐ தே கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு ஆசனம் பெற்றிருக்கின்றன. அவை விரும்பினால் அரசுடன் இருப்பதற்கும் அல்லது வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வதற்கும் உரிமை உடையன. எனவே, அவையும் “ ஏனைய கட்சிகள்” என்ற பன்மைப்பதத்திற்குள் கொண்டுவர முடியாதா என்ற கேள்வியை எழுப்பலாம்.
“ பாராளுமன்றத்தில் ஆசனம் பெற்ற” என்ற பதம் பாவிக்கப்படாமையால் மு கா போன்று அவைகளும் தனியாக ஆசனம் பெற்றிருக்கவேண்டும்; என்ற அவசியமில்லை; என்று வாதாடலாம். அவ்வாதம் சரியாயின் ஐ தே கட்சியும் மு கா வும் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்து வேண்டிய எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிக்கலாம். ஆனால் இந்த வியாக்கியானத்திலும் சிறியதொரு பிரச்சினை இருக்கின்றது.
அதாவது, இந்தக்கட்சிகளின் ஆசனங்களையெல்லாம் சேர்த்துத்தான் ஐ தே கட்சி “ அதிகூடிய ஆசனம்பெற்ற கட்சி” என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது. அந்நிலையில் அவைகள் ஏனைய கட்சிகள் என்ற அர்தத்திற்குள் கொண்டுவந்தால் அவற்றிற்கு ஐ தே க யின் ஆசனங்களுக்கப்பால் ஆசனம் இருக்க வேண்டும். அது மு கா வுக்கு மட்டுமே இருக்கின்றது. இல்லையெனில் பெரிய கட்சியாகிய ஐ தே கட்சியின் ஆசனம் குறைந்து பெரிய கட்சியென்ற அந்தஸ்த்தை இழக்கவேண்டும். அது வியாக்கியானத்தில் பாரிய பிரச்சினையைக் கொண்டுவரும்.
இந்நிலையில் ஐ தே கட்சியும் மு கா வும் சேர்ந்து தேசிய அரசாங்கமாவது கடினமே. டக்ளஸ் தேவானந்தா தனது சொந்தக்கட்சியில் தெரிவுசெய்யப்பட்டதால் அவரும் இணைவாரெனில் 46(5) தேவையைப் பூர்த்திசெய்யலாம். அல்லது தொண்டமானாவது வருவாராக இருந்தால் அவர் UPFA இல் போட்டியிட்டபோதும் CWC ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் “ பாராளுமன்றில் ஆசனம்பெற்ற” என்ற அந்த சொற்பதம் பாவிக்கப்படாத இடைவெளியை சாதகமாகக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நியாயப்படுத்தலாம்.
இறுதித் துரும்பு
————————
எது எவ்வாறிருந்தபோதிலும் ‘ பாராளுமன்றம் தீர்மானித்துவிட்டால்’ வெளியில் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அவ்வாறாயின் ரணிலுக்கும் மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லாமல்போகும்.
0 comments :
Post a Comment