சிங்கள பிரதான கட்சிகளில் ஒன்றை எதிர்த்தும் மற்றொன்றை ஆதரித்தும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. சிறிகாந்தா
இரண்டு பிரதான சிங்கள கட்சிகளினதும் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா கூறினார்.
யாழ்ப்பாணத்தில் ரெலோவின் இளைஞர் அணி யாழ் மாவட்ட கிளை கூட்டம் நேற்று(29) இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
உக்கிரமான அரசியல் போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு புகுந்து விளையாடுவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனை நடைமுறை சாத்தியமானது அல்ல. அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது மட்டுமன்றி சர்வசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
இரண்டு சிங்கள பேரினவாத கட்சிகளினதும் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. யதார்த்தம் இப்படியிருக்க, பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டதும், மஹிந்த நியமிக்கப்பட்டதும் ஜனநாயக விரோதமானது என்ற அடிப்படையில்தான், மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. அதன்பின்னரும் மஹிந்த பதவியில் தொடர, பெரும்பான்மையை நிரூபிக்கும் ஐ.தே.கவின் முயற்சிகளிற்கு ஒத்துழைத்தது. இந்த அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது.
அரசியல் நெருக்கடியின் போது கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டால் சிங்கள மக்களின் மனங்கள் வெல்லப்பட்டதாக அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், யதார்த்தம் வேறு.
சிங்கள பேரினவாத கட்சிகளின் அரசியல் பாரம்பரியத்தின் வழியில் இனவாத கோசத்தை மஹிந்த ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். பொதுதேர்தலொன்றில் அந்த அணி வெற்றியீட்டும் பிரகாசமான வாய்ப்புக்களே இப்போதும் உள்ளன. அந்த அரசியல் அணியை புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு பற்றி பேசுவது விவேகமானது அல்ல.
இந்த அரசியல் சூழலில், இப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் எதற்கும் இடமிருக்க போவதில்லை என அடித்து கூறலாம்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்க கைகொடுத்து கொண்டிருக்கும் கூட்டமைப்பின் முன்னால் அரசியல் சவால் இப்பொழுது எழுந்து நிற்கிறது. அரசியல் தீர்வு விடயத்திற்கு அப்பால், அரசை காப்பாற்றி நிற்பதற்கான பிரதிஈடாக தமிழ் மக்களிற்காக கூட்டமைப்பு எதனை பெற்றுக்கொடுக்க முடியும்?
காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றை அரசியல் அழுத்தத்துடன் கையாள வேண்டிய அதேநேரம், 13வது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை இனியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டியிருக்கிறது.
கூட்டமைப்பின் ஆதரவோடு பதவியிலிருக்கும் அரசு, அடுத்த இரண்டொரு மாதங்களில் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் மக்களின் நியாயமான சில கோரிக்கைகளையாவது நிறைவேற்ற தவறுமானால், தொடர்ந்தும் அரசுக்கு முண்டு கொடுப்பதை கூட்டமைப்பு மறந்தே ஆக வேண்டும்.
இந்த நிலைப்பாட்டின் பின்னால் உள்ள அவசியம், அவசரம் என்பவற்றுடன், கூட்டமைப்பின் சுயமரியாதையும் இதில் கலந்துள்ளது“ என்றார்.
0 comments :
Post a Comment