Wednesday, December 26, 2018

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள்! யாழ்ப்பாண ஆயர்

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அரசியல் கட்சிகளிடமும் யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு ஆயரால் அனுப்பிவைக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

2018ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன மத நிற மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படும் வேளை பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும்” (லூக்காஸ் 2:13-14) இந்த பெருவிழாக்காலத்தில் அவருக்கு உகந்தவர்களாகி எல்லோரிற்கும் அமைதி உண்டாக்கும் கருவிகளாகவே நாம் அழைக்கப்படுகிறோம்.

தேசிய ஜனநாயக முன்னனி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. இலங்கை நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் நீதியான சமத்துவமான அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம் பதவி பட்டம் என்பன எல்லாம் இங்கு முக்கியமல்ல

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி முதல் இலங்கை நாட்டை அச்சுறுத்திய “ஒக்ரோபர் 26 அரசியல் சூழ்ச்சி” என அழைக்கப்படும் அரசியல் முறுகல் நிலை ஓரளவு சுமூகமாக தீர்ந்துள்ளமை மனதிற்கு நின்மதி தருகிறது. ஜனநாயகம் வென்றுள்ளது என வரவேற்போம்.

இது ஒரு தேசிய பிரச்சினை என்கின்ற வகையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் என்கின்ற வகையில் நாமும் இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டுமென இறைவரம் வேண்டுமாறு இறைமக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பல பங்குகளில் வேண்டுதல் செய்தனர். எதிர்பாத்த பயந்த பயங்கர முடிவுகளும் இன்றி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இறைவனுக்கு நன்றி. இறை வரம் வேண்டிய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.

தேசிய ஜனநாயக முன்னனி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. இலங்கை நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் நீதியான சமத்துவமான அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம் பதவி பட்டம் என்பன எல்லாம் இங்கு முக்கியமல்ல.

ஒக்ரோபர் 26 அரசியல் சூழ்ச்சி – இது ஒரு முடிவல்ல, மாறாக இது ஒரு ஆரம்பமே. எதிர்பார்த்து நம்பி இருந்த அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமலே போய்விட்டது. நல்லெண்ண அரசு நீதியாக செயற்படும் என நம்பி ஏமாந்து விட்டோம்.

ஆனால் தமிழ் அரசியற் கட்சிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விலை போகாத வகையில் நாம் இன்று முன்பைவிட இன்னும் அரசியற் பலம் மிக்கவர்களாகவே உள்ளோம்.

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண இக்காலத்கைவிட மிக சிறந்த காலம் தோன்றப் போவதில்லை. இந்த நிலை தமிழ் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போர்க் காலத்தில் அனுபவித்த கோர அனுபவங்கள் வழியாகவே வந்தது என்பது உண்மை.

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியற் கட்சிகளுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெயரால் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகிறோம். தயவு செய்து தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்.

இப்போது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டு எட்டப்படாத எந்த முடிவும் வருங்காலத்தில் எட்டப்படும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது சாதகமற்ற உங்கள் எந்த நிலைப்பாட்டையும் இனியும் தமிழ் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என உறுதியாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

இலங்கை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அவர்களின் சம உரிமையோடு வாழக்கூடிய கூடிய சுதந்திர வாழ்விற்கான நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைக் கொண்டு வரக்கூடிய மாற்றப்பட முடியாத புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான செயற்பாட்டிற்காக அரசியல்வாதிகள் மட்டுமலல சம்மந்தப்பட்ட அனைவரும் கண்டிப்பாக பயணியாற்ற வேண்டுமென அழைப்புவிடுக்கிறோம்.

உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்புவிடுத்து இறையாசீருடன் கிறிஸ்மஸ் 2019ஆம் புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். என்றுள்ளது

No comments:

Post a Comment