முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுக்கள். இரண்டாவது அமைச்சு யாருக்கு? உள்ளே குத்துவெட்டு.
மு.கா மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.
சிங்கள ஆட்சியாளர்களினால் இரண்டு அமைச்சர் பதவிகள் மு.காங்கிரசுக்கு வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏனெனில் எத்தனை அமைச்சுக்களை வழங்க வேண்டுமென்று தீர்மானிப்பது மு.க தலைவரல்ல. மாறாக சிங்கள அரசாங்கமாகும்.
அப்படித்தான் மு.காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுக்கள் வழங்கப்பட்டால் தலைவருக்கு அடுத்ததாக இரண்டாவது அமைச்சர் பதவியை யாருக்கு வழங்குவது ? எந்த பிரதேசத்துக்கு வழங்குவது ? எந்த அடிப்படையில் வழங்குவது ? என்ற கேள்வியுடன் அவைகள் ஆராயப்பட வேண்டியவை.
முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகமான வாக்குகளை வழங்குகின்ற மாவட்டத்துக்கு அப்பதவி வழங்குவதுதான் நியாயம் என்றால் அது அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படல் வேண்டும்.
அப்படியல்லாமல் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய செய்வதற்காக அந்த பதவியை வழங்குவதென்றால், முதலில் திருகோணமலை மாவட்டத்தினையும், இரண்டாவது மட்டக்களப்பு மாவட்டத்தினையும் தேர்வு செய்யவேண்டும்.
திருகோணமலை மாவடத்தில் சுமார் 35 முஸ்லிம் கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அரசியல் அதிகரமின்றியும் காணப்படுகின்றது.
அப்படியல்லாமல் இதுவரையில் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தின் மூலம் பிரதேச வேறுபாடுகள் பாராமல், முஸ்லிம் சமூகத்துக்கு திறமையாக செயலாற்றி கட்சிக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த பிரதி அமைச்சருக்குத்தான் அது வழங்கப்படல் வேண்டுமென்றால் பைசால் காசிமே அதற்கு பொருத்தமானவர்.
தனக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவி மூலமாக தனது சொந்த கிராமத்தில் பாரிய நிதியில் தனியான வைத்தியசாலையினை அமைத்து வருகின்றார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசத்துக்கும், மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாடுதழுவிய ரீதியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் சுகாதார துறையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அல்லது, கட்சியின் நீண்டகால சிரேஷ்ட உறுப்பினருக்குத்தான் அமைச்சர் பதவி வழங்குவதென்றால் அதனை சம்மாந்துறையின் மன்சூர் எம்பிக்கு வழங்கப்படல் வேண்டும்.
அவர் இதுவரையில் கட்சி மாறி சென்றதாகவோ, மு.கா தலைவருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்ததாகவோ பதிவுகள் இல்லை. தனது சிறுவயதிலிருந்து தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வருகின்றவர்.
மேலே கூறப்பட்ட எந்த தகுதியும் பாராமல் மர்ஹூம் அஸ்ரப் பிறந்த மண்ணுக்குத்தான் வழங்குவதென்றால் அது ஹரீஸ் எம்பிக்கு வழங்கப்படல் வேண்டும்.
எனவே இங்கே பொறுப்புள்ள கட்சி போராளிகளும், சமூக நோக்கோடு நடுநிலையாக சிந்திக்கும் பகுத்தறிவு உள்ளவர்களும், தங்களை சார்ந்தவர்களுக்கு அதிகாரம் வந்தால் தாங்கள் வாகனம் ஓடலாம், அதிகமாக கொந்தராத்து செய்யலாம், அதிகாரத்தினை அனுபவிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.
மாறாக பொறுப்புள்ள பதவிகள் செயல்திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் சமூகம் நண்மை அடையும் என்றே சிந்திப்பார்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment