Saturday, December 29, 2018

முஸ்லிம் தனித்துவ அரசியலின் கொள்கைப் பாதை.. (பாகம்-1) வை எல் எஸ் ஹமீட்

எந்தவொரு ஸ்தாபனமும் உருவாக்கப்படும்போது அதற்கான கொள்கை, பாதை முதலில் வடிவமைக்கப்படுகிறது. அந்தப் பாதை வழியாகவே அது தன் இலக்கை அடைய முயற்சிக்கின்றது? ( முயற்சிக்க வேண்டும்)

அந்தவகையில் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் கொள்கைகள், அதன் பாதை வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா? அவை அப்பாதையில் செல்கின்றனவா? அவற்றிற்கும் அவை இன்று செல்கின்ற பாதைக்கும் இடையேயுள்ள இடைவெளி என்ன?

ஒரு கட்சியின் கொள்கையை/ பாதையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணி எது? இந்தக் கேள்விக்கான விடை “ அதன் இலக்கு என்பதாகும்.

உதாரணமாக த தே கூ பொறுத்தவரை அவர்களின் தெளிவான இலக்கு ‘ தங்களைத் தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ஓர் சுயாட்சியாகும். இந்த இலக்கை வைத்தே அவர்களின் கொள்கை மற்றும் பாதையைத் தீர்மானிக்கின்றார்கள். ஆட்சியில் நேரடிப் பங்காளியானால் அந்த இலக்கை அடைவதில் தடங்கல் ஏற்படும்; என்பதனால்தான் தாங்கள் இலக்கை அடையும்வரை ஆட்சியில் ஒருபோதும் பங்கெடுப்பதில்லை; என்பதை ஓர் கொள்கைத் தீர்மானமாக எடுத்திருக்கிறார்கள்.

காலங்காலமாக இந்தக் கொள்கை தமிழ் மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டிருக்கின்றது. இதன்காரணமாக சமகாலத்தில் த தே கூட்டமைப்பில் உள்ளவர்கள் சிலரிடம் ஆட்சியதிகாரக் கவர்ச்சியால் சில சலனங்கள் ஏற்பட்டாலும் அந்தக் கொள்கைப் பாதையில் இருந்து விலகமுடியாதவர்களாக இருக்கின்றார்கள். விலகினால் மக்களால் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள்; என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் மிகக்கவனமாக இருக்கின்றார்கள்.

நமக்கு மத்தியில் அவ்வாறான கொள்கைத் தெளிவுகளை முஸ்லிம் கட்சிகள் முன்வைத்திருக்கின்றனவா? என்ன இலக்கை அடைவதற்காக அந்த கொள்கைகள் வரையப்பட்டிருக்கின்றன; என்று அடையாளப் படுத்தியிருக்கின்றார்களா? இவை தொடர்பாக, நமது இலக்கு, அதை அடைவதற்கான கொள்கைப் பாதை இவை தொடர்பாக வாக்களிக்கும் நம்மிடம் தெளிவுகள் இருக்கின்றனவா?

அந்தப் பாதையில் அவர்களிடம் பிறழ்வுகள் கண்டு நாம் அதற்காக அவர்களை ஒதுக்கியிருக்கின்றோமா? அல்லது தாம் அவ்வாறான பிறழ்வான பாதையில் சென்றால் ஒதுக்கப்படுவோம்; என்ற அச்சம்தான் அவர்களுக்கு இருக்கின்றதா?

மறைந்த தலைவர் நமக்கு அவ்வாறான இலக்கையும் கொள்கைப் பாதையையும் அடையாளம் காட்டினாரா? நாம் அவற்றை அடையாளம் கண்டோமா? அவ்வாறாயின் இன்றைய பிறள்வை ஏன் அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றோம்.

அவற்றை அடையாளம் கண்ட தலைமுறை இன்று பின்னோக்கிச்செல்ல, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சமகால தலைமுறைக்கு மறைந்த தலைவர் அடையாளம் காட்டிய அந்த இலக்கு, கொள்கைப்பாதை போன்றவற்றில் தெளிவூட்டல் நடைபெறவில்லையா?

மறைந்த தலைவருக்குப்பின் பொதுத் தளங்களில்/ அரசியல் மேடைகளில் கொள்கை அரசியல் பேசப்படுகின்றதா? அல்லது மாமூல் அரசியல் பேசப்படுகின்றதா? கொள்கை அரசியல் பேசப்படாத நிலையில் இளைய தலைமுறையை நாம் குறைகூறமுடியுமா? கொள்கை அரசியல் பேசப்பட்டிருந்தால், இலக்கு பற்றி சிலாகிக்கப்பட்டிருந்தால் ‘ ரணில் எந்தப் பக்கம் நின்றாலும் நான் அந்தப் பக்கம், மஹிந்த எந்தப் பக்கம் நின்றாலும் நான் அந்தப்பக்கம்’ என்கின்ற நிலைப்பாடுகள் எடுக்கப்படுவதுமில்லாமல் அதற்கு “ கொள்கையில் உறுதி” என்றொரு அணிகலனும் அணிவிக்கப்பட முடியுமா? அதை அங்கீகரிக்க, அதைப் பெருமையாகப்பேச சமுதாயாத்தில் ஒரு கூட்டமும் இருக்கமுடியுமா?

மறைந்த தலைவர் நமது இலக்கின் உச்சாணிக் கொப்பாய் “ முஸ்லிம் அரசியல் விடுதலை” என்றொரு பதத்தை தனது தாரகமந்திரமாக முழங்கினாரே அதன் தாற்பரியத்தை இன்றைய இளைய தலைமுறை அறிந்துள்ளதா? தலைவர்கள் என்பவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கின்றனரா?

கொள்கை “இலக்கின்” அடிப்படையில் வரையப் படுகின்றது. இலக்கு எந்த அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றது?

இலக்கு தேவையின் அல்லது எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரையறுக்கப் படுகின்றது. அந்தத் தேவைகளை நாம்/ நமது கட்சிகள் அடையாளம் கண்டிருக்கின்றோமா? அவ்வாறு அடையாளம் கண்டிருந்தால் அத்திசையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றோம்?

இந்தத் தேவை, இலக்கு, கொள்கை என்பவற்றிற்கும் “ முஸ்லிம் அரசியல் விடுதலை, போராளி” என்ற சொற்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளைப்பற்றி சிந்தித்திருக்கின்றோமா? மறைந்த தலைவர் காரணமில்லாமலா நம்மை ‘ போராளிகள்’ என்று அழைத்தார். இன்றைய அரசியலில் அந்த ‘ போராளி’ என்ற பதம் பொருந்துமா?

இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா? “ என்று கேட்கின்றான். இஸ்லாம் அரசியல் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல். நாம் சிந்திக்கின்ற சமூகமாக இல்லாமல் வெறுமனே வாக்களிக்கின்ற எந்திரங்களாக வாழ்ந்தால் இரண்டு தேர்தலுக்கிடைப்பட்ட காலத்தில் அழுவதும் புலம்புவதும் தேர்தல் வந்ததும் மீண்டும் அதே சுழற்சியில் வாக்களிப்பதும் மீண்டும் விரக்தி தொடர்வதும் இவ்வாறு சென்றால் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்ற பொறுமை அடுத்த தலைமுறைக்கு இருக்குமென்று கூறமுடியாது. அவர்கள் விபரீத முடிவுகளை நோக்கி செல்வதில் இருந்து தடுப்பது சமகால தலைமுறையின் கடைமையாகும்.

எனவே, சிந்தியுங்கள். இந்தக் கேள்விகளுக்குரிய விடை தொடர்பாக சிந்தியுங்கள். தவறுகள் இருக்கின்றனவா? என்று சிந்தியுங்கள். அத்தவறுகளுக்கு யார் காரணம் என சிந்தியுங்கள். அவற்றிற்கான தீர்வுகளைப்பற்றி சிந்தியுங்கள். சிந்தித்தால் மட்டும் போதாது. சிந்தனையில் தெளிவுவேண்டும். எனவே, தெளிவுகாணுங்கள்.

இன்ஷாஅல்லாஹ், சமகால அரசியலின் பல பரிமாணங்கள் இத்தொடரில் ஆராயப்படும். நாம் தெளிவுபெற்று மறைந்த தலைவர் கூறிய ‘ அந்த விடுதலைப் பயணத்தில் நாம் பயணிக்காதவரை நம் எதிர்காலம் கேள்விக்குறியே! இங்கு எழுப்பப்பட்டுள்ள பலவகைக் கேள்விகள் தொடர்பாகவும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடர்களில் ஆராய்வோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com