ரூ 1000 அடிப்படைச் சம்பளத்திற்காக தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தொழிலாளிகள். தொண்டமானின் பித்தலாட்டம் தொடர்கின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 12.12.2018 அன்று மாலை தொலைநகல் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான்,
11.12.2018 அன்று இரவு 8 மணியளவில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சந்திப்பு இடம்பெற்று வரும் பொழுது 9 மணி ஆகிவிட்டது. இதனையடுத்து ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக பணிபகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை பணிக்கு செல்லும்படி ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுத்தேன்.
சில தோட்டங்களில் இந்த அறிவிப்பு முறையாக கிடைக்காத பட்சத்தில் 12.12.2018 அன்றைய தினம் தொழிலாளர்கள் பல இடங்களில் பணிக்கு செல்லாது இருந்துள்ளனர். அதேவேளை 13.12.2018 அன்று தொழிலாளர்கள் வழமையான தொழிலுக்கு செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ம் திகதி காலை 10 மணியளவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக என்னிடம் உறுதியாக தெரிவித்தார்.
அதேவேளை இன்று முன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை தொழிலுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார். இதனடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்த நிலையில் பணிபகிஷ்கரிப்பை கைவிட நாம் தீர்மானித்தோம்.
இது இவ்வாறிருக்க பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுவதற்கு முன்பாக கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் பெருந்தோட்ட கூட்டமைப்பு தொழிற்சங்க தலைவர் எஸ்.ராமநாதன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்து விட்டே இந்த போராட்டத்திற்கான அழைப்பு காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு விடுத்தது. இதை அவர்கள் மறுப்பார்கள் என்றால் ஊடகங்கள் அவரிடமே வினாவ வேண்டும் என்றார்.
நான் வித்தை காட்டுவதாக சிலர் சொல்கின்றார்கள் என என்னிடம் வினாவுகின்றீர்கள். நான் வித்தைக்காரன் ஆகவில்லை. வித்தைக்காரனாகிய பின் நான் காட்டுவேன் என பதிலளித்தார்.
இந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் தொலைநகல் ஊடாக எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவாரத்தைக்கு அழைப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். (அவர் அனுப்பிய தொலைநகல் நகலை ஊடகங்களுக்கும் பரிசீலிக்க காட்டினார்) பத்திரிக்கை செய்தி தொடர்பாக நான் முதலாளிமார் சம்மேளனத்திடம் வினவியபோது, பத்திரிக்கைகளில் தவறாக இந்த செய்தி பிரசுரமாகியுள்ளது என தெரிவித்ததாவும், அவர் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment