பாராளுமன்று கலைக்கப்பட்டது நீதிக்கு விரோதமானது என்றும் அரசியல் யாப்பினை மீறுவது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் , மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், 19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.
இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர
தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துரைத்துள்ள மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அலரி மாளிகையில், நடந்த கூட்டத்துக்குப் பின்னர், 'தி ஹிந்து' நாளிதழுக்கு தகவல் வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
'நிச்சயம் நாங்கள் நீதிமன்றத்தில் இதனைச் சவாலுக்கு உட்படுத்துவோம்.
இதன் விளைவாக சிறிலங்கா அதிபருக்கு எதிராக ஒரு குற்றவியல் பிரேரணையையும் கொண்டு வருவோம். ஏனென்றால் அவரால் நாட்டுக்கும் நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கும் ஆபத்து உள்ளது.
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால், இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல். எனவே, இந்தக் கலைப்புக்கு எதிராக சவால் விட வேண்டிய தேவை உள்ளது.' என்றும் அவர் கூறியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜேவிபி யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாகவும் இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment