Saturday, November 24, 2018

தேசத்தில் என்ன மாற்றம் நேர்ந்தாலும் தேச நலனே முஸ்லிம்களின் இலக்காக இருக்க வேண்டும். M.T.M.Rizvi

ஒரு முஸ்லிமை பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கின்ற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்துவிடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் தான் வாழும் தேச நலனுக்குச் சாதகமானதாக மாற்றிட பழகிக்கொள்ள வேண்டும்.

“தேச நலன்” என்பது தான் வாழும் நாட்டின் அரசியல், பொருளாதாரம், அதன் பாதுகாப்பு இத்தனையையும் மிகச்சரியாகப் பேனுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் எத்தகைய அம்சங்கள் தேவையோ அவைகளை மேற்கொள்வது தேச நலன் எனலாம். இது அத்தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனினதும் உணர்வுகளுடன் ஒன்றித்திருக்க வேண்டிய பண்பாகும். “நாம் இலங்கையர்” என்ற கொள்கைதான் எம்மை இத்தேசத்தின் பற்றாளர்களாகவும் பங்காளியாகவும் அடையாளப்படுத்துகின்றது என்பதுடன், நாட்டின் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, அதன் அபிவிருத்தி, என்ற அடிப்படை விடயங்களில் இனம், மதம், மொழி வேறுபாடுகள் கடந்து நாம் பங்களிப்புச் செய்யும் மன நிலையையும் கூட தோற்றுவிக்கிறது.

தேச நலன் இன்று பேசப்பட வேண்டிய, உரையாடப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்ற வகையில் இக்கட்டுரை பொருத்தமாக அமையும் என நம்புகின்றேன்.

இலங்கை பண்மைத்துவப் பண்புகள், கொள்கைகள், நம்பிக்கைகளை உடைய மக்களைக் கொண்டதோர் தேசமாகும். அப்பன்மைத்துவ நிலைகள் தேச நலனில் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடக்கூடாது. தேச நலன் பேனுவது என்பது எல்லோர்க்கும் பொதுவானது. ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்தான் அதுபற்றிய அறிவும் தௌிவும் காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் தேச நலனை மாத்திரம் கருத்தில் கொள்ளும் மனிதர்களின் செயற்பாடுகள் எப்படி அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதை அடையாளப்டுத்தும் கட்டுரையாயகக் கூட இதனைப்பார்ககலாம்.

01. “தேச நலன்” என்பதற்கான முதன்மை அம்சம்தான் தனது தேசத்தில் அநீதியும், அக்கிரமும் தலைவிரித்தாடும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுப்பதும், தீமைக்கு எதிரான போராட்டத்தில் கை கோர்ப்பதுமாகும். அத்தோடு நாட்டின் நலனுக்குப் பங்களிப்புச் செய்வதும் இன்றியமையாததும், ஈமானிய மற்றும் சமூக உணர்வூமாகும்.

“எக்காரியம் நல்லதாகவும், இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள், உதவுங்கள். எவை பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும் இறைவனை அஞ்சாதவர்களுக்கு நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக்கடுமையானது.” என அல்குர்ஆன் எப்படியான விடயங்களுக்கு ஒரு முஸ்லிம் ஒத்துழைக்க வேண்டும், எத்தகைய விடயங்களில் விலகி நிற்க வேண்டும் என்பதை தௌிவாக வழிகாட்டுகிறது.

அதாவது தான் வாழும் தேசத்தில் நன்மைகளை வாழவைக்கவும் தீமைகளை ஒழிக்கவும் ஒன்றுபடுவதே மனிதப்பண்பாகும்.

ஆரம்ப காலத்தில் சிரியாவினுடைய ஒரு மாகாணமாக இருந்த ஹிம்ஸ் பிரசேத்திற்கு ஆளுணராகச் செயற்பட்ட உமைர் (ரழி) என்ற நபித்தோழர் தனது தேச மக்கள் பிரதிநிதிகளை நோக்கியாற்றியதோர் உரையில் “இஸ்லாம் என்பது உறுதியான வாயிலைக்கொண்டதோர் கோட்டையாகும். கோட்டை என்பதன் கருத்து நீதியாகும். உறுதியான வாயில் என்பது உரிமைகளாகும். கோட்டை தகர்க்கப்பட்டு வாயில் உடைக்கப்பட்டால் இந்த மார்க்கம் வெற்றி கொள்ளப்பட்டு விடும். மக்களின் பிரதிநிதிகளான அதிகாரிகள் உறுதியாக இருக்கும் வரை இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பது தேசத்தில் நீதியை நிலைநாட்டுவதும் மக்களிடையே உரிமைகளைப்பெற்றுக் கொடுப்பதிலும்தான் உள்ளது.” எனக் குறிப்பிட்டார். இது எமது முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கு நல்லதோர் படிப்பினையை தருகிறது. அதாவது மக்களது உரிமைகளை பேணுதல், நீதியாக நடந்து கொள்ளுதல் ஓர் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளின் கடமை என்பதை இது வழியுறுத்துகின்றது. தேச நலன் என்பது சமூக நீதி பேணுவதும், உரிமைகளை வென்றெடுப்பதுமாகும் என்பதைக் கற்றுத்தருகிறது.

02. “தேச நலன்” என்ற எண்ணக்கருவின் மற்றுமொரு முக்கிய விடயம்தான் ஊழலை ஒழிக்கப் பாடுபடுவதாகும். ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்புக்குள்ளாக்குகின்ற காரணிகளுள் ஊழலே முதலிடம் வகிப்பதாக பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு அரச அதிகாரி தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக புரியவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியான சம்பளம் தவிர்ந்த பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் ஊழலாகும். ஒரு நபரோ அல்லது பலரோ ஓர் அரச ஊழியரை, பிரதிநிதியை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாது தடுக்க அவர்களுக்கு லஞ்சம் வழங்குவதும் அல்லது பெறுவதும் ஊழலாகும்.

இந்த ஊழல் செயற்பாட்டில் இத்தேச அரசியல் பிரதிநிதிகள் கூட விதிவிலகில்லை. கட்சித்தாவல், பாராளுமன்ற ஸ்தீரத்தை உறுதிப்படுத்தல், பதவி உத்தியோகங்களை பெற்றுக்கொடுத்தல், அநீதியான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுத்தல் என நீண்ட நெடிய பட்டியல் உண்டு. இதனை எமது தேசத்தின் ஜனாதிபதி அவர்கள் கூட பாராளுமன்றத்தை தான் கலைப்பதற்கான முதன்மைக் காரணிகளுல் ஒன்றாக பாராளுமன்ற உறுப்பினர்களின் விலைபோகும் நிலைதான் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இக் கருத்து இத்தேசத்தின் ஊழல் நிலைமையை உறுதிப்படுத்தி நிற்கிறது. எனவே, இத்தேசம் தூய்மை பெற உழல் ஒழிக்கப்பட வேண்டும். அதில் பங்கேற்பது தான் தேச நலனாகும்.

இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் ஜனாதிபதி உமர் (ரழி) நல்லாட்சியின் முன்னோடி. ஒரு முறை ஒருவர் இரண்டு தலையணைகளை உமரின் (ரழி) மனைவியிடம் அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். தன் வீடு சென்ற உமர் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான தலையணைகளை அங்கு காண்கிறார். தன் மணைவியிடம் இவை எங்கிருந்து எமது வீட்டில் ? என வினவினார். இதை இன்னார் நமக்கு அன்பளிப்பாக தந்து சென்றார் என மனைவி கூறவே “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக” என கோபமாக கூறிவிட்டு. அந்த நபர் தனக்கான ஒரு தேவையை நிறைவேற்றவேண்டி என்னிடம் வந்தார் நான் அதனை அனுமதிக்கவில்லை. ஆதலால், என் மனைவியின் சிபாரிசை எதிர்பார்த்து இதனை இங்கு உம்மிடம் அன்பளிப்பு என்ற பெயரில் தந்துள்ளார் என உமர் கூறிவிட்டு, அத்தலையணைகளை மனைவியிடம் இருந்து பரித்தெடுத்துக் கொண்டு சென்று இரண்டையும் முஹாஜிர் மற்றும் அன்சாரி பெண்கள் இருவருக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். (ஆதாரம் பைஹகி)

அதுபோன்று கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் உமையா ஆட்சிக்கால நேர்மை மிக்க ஜனாதிபதி. இவரது அவைக்கு ஒரு தடவை ஆப்பிள் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆப்பிள் சாப்பிட வேண்டுமென்ற ஆவல் அவருக்கு இருந்தும் கூட கலீபா அவர்கள் அதில் ஒன்றையேனும் எடுக்காது மறுத்துவிடுகிறார். ஏன் கலீபா அவர்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இதுபோன்று அப்பளிப்புகள் வந்தபொழுது வாங்கி இருக்கின்றார்களே என்று கேட்டபொழுது உண்மைதான் ஆனாலும், இன்று என்னைப்போன்ற மக்கள் பிரதிநிதியான அரச ஊழியனுக்கு வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புகளுமே யாதோ ஒருவரால் தன் சொந்தத் தேவையை நிறைவேற்ற முன்வைத்துத்தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே இவை வேண்டாம் அதனை திருப்பி அனுப்பிவையுங்கள் என உத்தரவிட்டார்.

சாய்ந்து அமர உதவும் சாதாரண தலையணையாலும், ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து உண்பதாலும் என்னதான் நடந்துவிடப்போகிறது. ஏன நினைக்கும் இக்காலத்தில் எமது அரசியல் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் இதிலிருந்து பாடமும் படிப்பினையும் பெற வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பளிப்புகளுக்குக் கூட அடிமையாகாத மனிதர்களாக வாழ வேண்டும்.நேர்மை, வாய்மை, சேவை மணப்பான்மைகளோடு செயற்படவேண்டிய பிரதிநிதிகள் ஒரு பொதும் இலஞ்ச ஊழல் எனும் கறைகளால் மாசுபட்டுவிடக் கூடாது.

03. தேச நலன் எண்ணக்கருவின் பிரிதொரு விடயம்தான் தேசத்தின் பாதுகாப்பு, அமைதி, கட்டுப்பாடு இவைகளில் அதிகூடிய கவனம் செலுத்துவதாகும். அல்-குர்ஆன் துல்கர்னைன் என்றதோர் மனிதரைப்பேசுகின்றது. அவர் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தேசத்தின் சமூகத்தை சந்திக்கின்றார். அச்சமூகம் யஃஜுஜு மஃஜுஜு என்ற சாரார்களால் பெரும் தொல்லைகளுக்கு ஆற்பட்டு தமது பாதுகாப்பு, அமைதி, நிம்மதி அத்தனையையும் இலந்து காணப்பட்டனர்.

இதற்கான தீர்வினை பெற்றுத்தர துல்கர்ணைனை அவர்கள் வேண்டி நின்றனர். அவரோ அச்சமூகத்தின் மீது கொண்ட அன்பினாலும், தான் பெற்றிருந்த இறை அருள் நிறைந்த திறமையினாலும், அம்மக்களின் ஒத்துழைப்பையும் திரட்டி, குறித்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார். (18:92-98). திறன்கொண்ட மனிதர்கள், தான் சந்திக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது என்பது தேசத்தின் நலனின் அவருக்குறிய அக்கறையை புலப்படுத்தும். ஒரு தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் இதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் அத்தேச நலனில் அக்கறைமிக்க பிரதிநிதிகளின் தலையாய கடமை என்பதை இது உணர்த்துகிறது.

04. “தேச நலன்” எண்ணக்கருவின் மற்றுமொரு அம்சமாக தேசத்தின் பொருளாதாரம் அதன் அபிவிருத்தியில் சுய நலமில்லாமல் பங்கெடுப்பதும் ஓர் அம்சமாகும்.

யூஸூப் (அலை) என்றதோர் இறைத்தூதர் அவர் செய்யாததோர் தவருக்காக சிறையில் இடப்படுகிறார். ஒரு நிரபராதியின் சிறைவாசம் அது. அது அவரை தன் தேசநலனில் வெறுப்புக்கொள்ளச் செய்யவில்லை.

தன் தேச மன்னன் ஓர் கனவு காண்கிறார். அக்கனவுக்கான விளக்கத்தை சிறையில் இருந்த யூஸூபிடம் வினவப்படுகிறது. அதற்கான விளக்கத்தை யூஸூப் “எமது தேசத்தில் ஏற்படப்போகிற பஞ்சம், பொருளாதார நெருக்கடி அதற்காக செய்யப்படவேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னரின் கனவு காட்டுகிறது” என விளக்கம் கூறினார். அபூர்வமான அவ்விளக்கத்தைக் கேட்ட மன்னன், யூஸூபை விடுதலை செய்து, மன்னனின் ஆலோசகராக நியமிக்கிறார். யூஸூப் தனது பொருளியல் சார் திறனையும், தன்னால் இத்தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் மன்னரிடம் தெரிவிக்கவே அவரை மன்னன் தேசத்தின் நிதிப் பொருப்பாளராக நியமித்தார். இச்சம்பவம் அல்குர்ஆனின் அத்தியாயம் 12 வசனங்கள்; 42-55 தௌிவாக பேசுகிறது.

உண்மையில் யூஸூப் நபியவர்கள் தான் அவதூருக்குற்றத்திற்கு ஆளாகி, தான் நிரபராதி என்றிருந்த நிலையிலும் சிறையடைக்கப்பட்டு, அவமானப்படுத்திய தன் தேசத்திற்கே அத்தேச நலனில் அக்கறையுடன் செயற்பட்டார் என்றால் இதனையே தேச நலன் என்ற என்னக்கருவை விளங்கிக்கொள்ள போதுமானதாக உள்ளது.

05. தேசநலன் என்பதன் மற்றொரு செயன்முறைதான் அரசியல் பிரதிநிதிகளும், தேசமக்களும் தேசத்தின் அபிவிருத்தியில் பார்வையாளர்களாக அன்றி பங்காளிகளாக மாறவேண்டும்.

கலீபா உமர் (ரழி) ஒரு தடைவ கடுமையான வெயில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்ததை உஸ்மான் (ரழி) கண்டு கலீபா உமரே என்ன, இந்தக் கொடும் வெயிளில் எதனையோ தொலைத்து விட்டவர் போல் தேடிக்கொண்டிருக்கிறீர் என கேட்டபோது, திறைசேரிக்குறிய ஒரு ஆட்டைக் காணவில்லை அதனையே தேடுகிறேன் என்றார் கலீபா உமர் (ரழி). அதற்கு உஸ்மான் (ரழி) நீங்களோ ஓர் கலீபாவாக இருக்கும் நிலையில் ஒரு ஆளை நியமித்து அந்த ஆட்டை தேடச் சொல்லி இருக்கலாமே! நீங்களோ நிழலில் ஓய்வெடுக்கலாமே என்றார்.

கலீபா உமரோ (ரழி), உஸ்மானே! நீங்கள் வேண்டுமானால் ஓய்வெடுங்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் எனக்கு பதிலாக மறுமையில் அல்லாஹ்விடம் ஒரு ஆடு காணாமல் போனமைக்கு பதில் சொல்வீரா எனக்கேட்டார்.

இதுவே தேச நலனில் அக்கறையுடைய மக்கள் பிரதிநிதிகளின் பண்பு, பார்வையாளர்களாக அன்றி பங்களியாக செயற்பட்டார்கள்.

06. “தேச நலன்”; என்பதன் எண்ணக்கருவில் மற்றொரு விடயமே வீண்விரயம், ஆடம்பரம் தவிர்த்து, எளிமை வாழ்வினை கடைப்பிடிப்பது. இது குறித்து இன்றைய அரசியல் பிரதிநிதிகளுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. இது தேசத்தின் பொருளாதாரத்தையும், வளங்களையும் துஷ்பிரயோகம் செய்யும் செயன் முறையாகும். நல்லாட்சியின் அடையாளம் எளிமையும், சிக்கனமுமாகும்.

இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு நல்லாட்சி செய்த மக்கள் பிரதி நிதிகள் தம் தேச நலனில் பின்வருமாறு காணப்பட்டனர் :

1. பொறுப்பு ஒரு அமானிதம் என்பதை புரிந்து வைத்திருந்தமை.

2. தமது பொறுப்பு பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நினைவில் கொண்டமை.

3. எளிமையான வாழ்க்கை.

4. பண்பாடான சக வாழ்வு.

5. நீதியாக நடந்தமை, சட்டம், ஒழுங்கு பேணியமை.

6. ஆக்க பூர்வ விமர்சனங்களை அங்கிகரித்தமை.

7. ஆலோசனை செய்து செயற்பட்டமை.

8. எப்பொழுதும் துறைசார்ந்தோறை அனுகியமை.

9. நிதானம், சகிப்புத்தன்மை, கன்னியம் பேணியமை.

10. சமகாலத்தில் ஈமானிய உணர்வோடும், சமூக உணர்வோடும் பங்காற்றிமை.

எனவே, இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு நல்லாட்சி செய்த மக்கள் பிரதி நிதிகளைப்போல் எமது மக்கள் பிரதிநிதிகளும் மாற முன்வரவேண்டும். தாம் கொண்டுள்ள திறமைகள், வகிக்கும் பதவி, அதிகாரம் எனபன மக்களுக்கும், தேச நலனுக்கும் சேவை செய்வதற்கே என்பதை உணர வேண்டும்.

குறிப்பாக நாட்டின் இன்றைய அரசியல் நெருக்கடிச் சூழல் எமது முஸ்லிம் தலைமைகளும் சமூகமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பின்வரும் குர்ஆனிய வழிகாட்டல் தேச நலனில் எமது பொறுப்பை வழியூறுத்தும என கருதுகிறேன்.

• கலக்கமுறாது உறுதியாக இருப்பது.

• அல்லாஹ்வின் பால் நெருங்கி, அவனை நினைவு கூறுவது.

• அல்லாஹ், அவனது தூதர் வழிகாட்டலை பின்பற்றுவது.

• எமக்கிடையே பிணங்கிக்கொள்ளாது இருப்பது.

• பொறுமையை கடைப்பிடிப்பது. (8:45இ46)

எனவே தேசத்தின் நலன்களுக்காய் ஒன்றுபடுவோம், ஒத்துழைப்போம், கைகோர்ப்போம்.தேச நலனே எமது இலக்காகட்டும்.

As Sheikh: M.T.M.Rizvi (Majeedy), BA (Hons), PGDE MA, Mphil,
Senior Lecturer, Head of Dept. of Islamic Studies
Eastern University Sri Lanka

No comments:

Post a Comment