Friday, November 23, 2018

புலிகளின் சின்னங்கள் , கொடிகளை பயன்படுத்தல் தடை! எழுச்சிப்பாடல்களுக்கும் வரும் ஆப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாயில் 51 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் புலிகளின் மாவீரர் தின கொண்டாட்டங்களை நடாத்த சைக்கிள்கொம்பனி திட்டமிட்டுள்ளது.

இதையறிந்த கோப்பாய் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் மாவீரர் தினத்தை தடைசெய்யக் கோரும் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற ஏற்பாடுகளின் கீழ் நிகழ்வுக்கு தடை உத்தரவு வழங்க வேண்டும்.

அத்துடன், நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொலிஸாரின் மனுவை விசாரணை செய்த யாழ்பாணம் நீதிவான் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புலிகள் அமைப்பு இலங்கையில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பிலிருந்து மரணித்தவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுகின்றனர். குறித்த பயங்கரவாதிகளை நினைவுகூரும் நிகழ்வு நவம்பர் 27ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டபின்னர் இந்நிகழ்வு கைவிடப்பட்டிருந்தது. 2015 ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவ்வுறுப்பினர்களின் பெற்றோர் உறவினர்கள் நினைவு கூரலாம் என்ற விதிவிலக்கு ஒன்று நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசினால் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்த இடைவெளியினுள் நுழைந்த அரசியல்வாதிகள் அதனை தமது அரசியல்லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க கூடியதாகவுள்ள இத்தருணத்தில் இத்தடையுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிமன்றினால் இவ்வாறானதோர் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு எழுச்சிப்பாடல்களை இசைத்து குழப்பங்களை உருவாக்கின் அதன் விளைவுகளை அங்கு பங்குபற்றச் செல்கின்றவர்கள் மாத்திரமல்ல பார்வையாளர்களும் சந்திக்க நேரிடலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com