சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் மைத்ரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி நிராகரித்திருக்கின்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் – சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே நேரடியாகவே தமது இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தியதாக மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இதில் தானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இனைத் தலைவர்களான திகாம்பரம்,பெரியசாமி ராதாகிருஸனண் உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்துள்ள அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரி தங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள மனோ, இந்த அழைப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமித்த மைத்ரிபால சிறிசேன தற்போது, மஹிந்தவிற்கு நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
இதற்கமையவே இந்த சந்திப்புக்களை அவர் நடத்தி வருகின்றார். எனினும் மஹிந்தவின் பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான நாடாளுமன்றில் 113 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாகியுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நவம்பர் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தச் சந்திப்பின் எம்மிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
“முதலாவதாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.
இரண்டாவதாக, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினார்.
மூன்றாவதாக, ஒருவேளை வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டாம், அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்று கோரினார்.
எனினும், இந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டோம். மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.
No comments:
Post a Comment