விருப்பத்திற்கு மாறாக மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துச் சென்ற அதிபருக்கு எதிராக முறைப்பாடு.
பாடசாலைக்கு சென்ற தமது மகனை, அதிபர் பலவந்தமாக ஆர்ப்பாட்ட போராட்டமொன்றில் ஈடுபடுத்தினார் என, அந்த மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராகவே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“கடந்த வெள்ளிக்கிழமை தரம் 8 இல் கல்வி பயிலும் எமது மகனை மூன்றாம் தவணை பரீட்சை எழுத பாடசாலைக்கு அனுப்பினோம். ஆனால் எமது மகன், அவருக்கு விருப்பமில்லாத நிலையில் பாடசாலையிலிருந்து வீதிக்கு அழைத்து வரப்பட்டு, அதிபருக்கு சார்பான ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததன் பின்னரே அவர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதிபரை நம்பியே எமது மகனை பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறோம். மாணவர்கள் பாடசாலையிலுள்ள ஏழு மணித்தியாலமும் முழு வழிகாட்டியும், பொறுப்புதாரியும் அதிபர்தான்.
அதிபர் பாடசாலையில் இருந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. எனவே இதற்கான முழு பொறுப்பாளியும் அதிபர்தான். இலங்கை சட்டங்களின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்ட்தில் ஈடுபடுத்தக் கூடாது என அறிகிறேன். எனவே சட்டத்திற்கு புறம்பான விதத்தில் எனது மகனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய அதிபரை விசாரணை செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவரகளிற்கு வழங்கப்பட்ட மீ்ன்ரின்களில் மோசடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு பாடசாலை அதிபருக்கு எதிராக சிறு குழுவொன்று ஆர்ப்பாட்டம் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து- பாடசாலை அதிபருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு- பாடசாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இரண்டு அணிகளும், இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
0 comments :
Post a Comment