Monday, November 5, 2018

அன்ரன் பாலசிங்கத்திற்கு நற்சான்றுதல் வழக்குகிறார் அதாஉல்லா!

புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி எனத் தெரவித்திருந்தார். அவ்விடயத்தை அவர் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்த இவர் ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே இவ்வாறு கூறினார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு,

நான் ஒரு நபரை மிக மிக அதிகமாக திட்டி இருக்கின்றேன் என்றால் அது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஆகும். ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டின் மீது எவ்வித அக்கறையும் கிடையாது. நாட்டு மக்கள் மீது எவ்வித கரிசனையும் கிடையாது. மேற்குலகத்தின் நலன் சார்ந்த விடயங்களில் மாத்திரமே அவரின் கவனம் இருந்து வருகின்றது. நாட்டு மக்களுக்கு இடையில் வேண்டும் என்று திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி மோத விட்டு அதில் குளிர் காய்பவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சாரதியாக உள்ள வரை ஐக்கிய தேசிய கட்சி என்கிற வாகனத்தில் ஏற மாட்டார் என்று எமது பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் தெரிவித்து உள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சுயநல முஸ்லிம் அரசியல் தலைமைகள் ரணில் விக்கிரமசிங்கவின் செல்ல பிள்ளைகளாகவும், எடுப்பார் கை பிள்ளைகளாகவும் இருந்து இயங்கி வருவதை கண்கூடாக காண முடிகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவை நான்தான் மிக மோசமாக திட்டி உள்ளேன் என்று இது வரை காலமும் நம்பி இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை அண்மையில் பொய்த்து விட்டது. ஏனென்றால் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் மிக மோசமாக ரணில் விக்கிரமசிங்கவை திட்டி தீர்த்து உள்ளதை காணொளிகள் மூலமாக கடந்த நாட்களில் பார்த்து பிரமித்து போனேன். ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி என்பதை பாலசிங்கம் மிக நன்றாக அறிந்து வைத்து இருந்துள்ளார்.

விடுதலை புலிகளின் போராட்டம் வழி தவறி போனதற்கு அமெரிக்காவே காரணம் ஆகும். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தம் உண்மையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தமே ஆகும். எமது நாடு அமைதி பூங்காவாக விளங்குவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. அமெரிக்காவின் நலன்களை முன்னெடுப்பவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த கால பகுதியில் எமது நாடு காலனின் பிடியில் சிக்கி இருந்தது. அது இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சாபம் பிடித்த காலமாகவும் விளங்கியது. ஆகவேதான் நாம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத புதிய அரசாங்கத்தை உருவாக்க அவர் பிரதமரான நாள் தொட்டு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டோம். அதை முன்னிறுத்தியே பாலமுனை பிரகடனத்தை நிறைவேற்றினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பையும், இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் ஒன்றுபடுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒருமைப்படுத்தி பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து வெற்றி கண்டு உள்ளோம். பாலமுனை பிரகடனத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றன.

இந்நாடு வனப்பும், செழிப்பும் நிறைந்தது. இந்நாட்டு மக்கள் அனைவரும் நல்லவர்கள். இலங்கையர் என்கிற தேச பற்றுடன் நாம் எல்லோரும் வாழ்கின்ற நற்காலம் முகிழ்க்க வேண்டும். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ள முடியும். வெளி சக்திகளை இதில் தலையிட இடம் கொடுக்க முடியாது. மூன்று இனங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள் ஒன்றாக ஒரு மேசையில் கூடி பேசி அரசியல் தீர்வுக்கான குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை எட்ட முடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதற்கான செயல் திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

(எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment