Monday, November 19, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சுமந்திரன் பொறுப்பேற்றுள்ளாராம். சாடுகின்றார் வீரவன்ச

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீரவன்ச, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், எம்.ஏ.சுமந்திரனே மேற்படி சந்திப்பில் கருத்துகளை பெருமளவில் முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினரிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

அவ்வாறு நிலையியற் கட்டளையின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் எனவும் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் தரப்பினர் கூறியதாக விமல் வீரவங்க குறிப்பிட்டிருந்தார்.


இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஆதரவுக் கடிதங்களையும் எடுத்துக்கொண்டு, தாம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்து, தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர், ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பதிலை இன்றைய சந்திப்பில் வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10 மணிக்கு முன்னர் பதிலொன்றை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமக்குள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன், இன்றைய தினம் அமைதியான முறையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அனைத்து கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com