கௌரவத்துக்குரிய சுமந்திரன் கவனத்துக்கு! விஜய பாஸ்கரன்
மக்களுக்காக மக்களைக் காக்கப் போராடுபவனே போராளி, மாவீரன். புலிகள் யாருக்காகப் போராடினார்கள்? எங்கே எந்த இடத்தில் மக்களைக் காப்பாற்றினார்கள். மக்களுக்காக எங்கே உயிரிழந்தார்கள். அவரகள் உயிரிழந்தது இராணுவத்துடனான மோதல்களில் மட்டுமே. இராணவத்திடம் சிக்காமல் தவிர்க்க தற்கொலைகளும் செய்தார்கள். இவர்களுக்காக மக்கள் ஏன் கண்ணீர் சிந்தவேண்டும்? இவர்களால் மக்களே பலிக்கடாக்கள் ஆனார்கள். இந்த உண்மைகளை தெரிந்தும் சுமந்திரன் பேசலாமா?
சொந்த சகோதரர்களை, சக போராளி அமைப்புக்களின் உறுப்பினர்களை எப்படி எல்லாம் கொன்றனர் என்பதை சுமந்திரன் அறியாதவரா?
உயிரோடு நெருப்பிலே போட்டு எரித்தவர்களை கயவர்களை நினைவுகூர வேண்டும் என சட்டம் படித்த சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் வாதம் பண்ணுவது நியாயமா?
இந்தக் கொடுமைகள் எதுவும் சுமந்திரன் அறியாதவரா?
புலிகளுக்காக நியாயம் பேசும் இவர் நல்ல சட்டத்தரணியாக இருப்பாரா? என்ற சந்தேகம் வருகிறது.
புலிகளுக்கு மக்கள்மீது அக்கறை இருந்ததா? மக்களைப் பலிகொடுத்து சர்வதேச அனுதாபங்களை தம்பக்கம் திசை திருப்ப எத்தனை கூத்தாடினார்கள். அதேநேரம் இராணுவத் தாக்குதல் நடாத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப எவ்வளவு நாடகம் போட்டார்கள். பல நூறு மக்களைப் பலிகொடுத்து ஒரு சில இராணுவத்தை கொன்று வீரம் பேசிய கோழைகளே புலிகள். இதை சுமந்திரன் அறியாதவரா?
இராணுவத்துடனான புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்ற கல்லூரி அதிபர் ஆனந்தராசாவைக் கொன்றார்கள். அடுத்த சில மாதங்களில் அதே ராணுவத்தோடு கைகுலுக்கி சந்தோசம் கொண்டாடினார்கள். நண்பர்களானார்கள். ஒரு கல்வியாளன் கொலைக்கு காரணமான புலிகள் எப்படி சுமந்திரனுக்கு மாவீரர்களாக தெரிகிறார்கள். சுமந்திரன் முட்டாள் அல்ல. ஆனால் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார்.
மக்கள் பாதுகாப்புக்காக எச்சரிக்கையுடன் கூடிய அபாய மணியை புளட் யாழ் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைத்தது. அது மக்களுக்கு அபாய எச்சரிக்கை கொடுத்தது. அதை துப்பாக்கி முனையில் அகற்ற வைத்தவர்கள் புலிகள். மக்கள்மீது அவ்வளவு அக்கறை.
யாழ் பல்கலைக்கழக வாசலில் பிரதான அலுவலகம் திறந்தார்கள். அது பல்கலைக் கழகத்துக்கு ஆபத்து என்பது தெரியாதா? தெரிந்தே புலிகள் செய்தனர். இவர்களுக்கா மக்கள் நலனில் அக்கறை? இவர்களுக்காகவா சுமந்திரன் பேசுகிறார்.
வேம்படி மகளிர் கல்லூரி, மத்திய கல்லூரி அருகில் இருந்து கோட்டைக்கு செல் அடிக்கும்போது திருப்பி அடிக்கப்படும் பதில் குண்டுகள் கல்லூரிகளை மாணவர்களை பாதிக்கும் என உணராமல் உயிரிழப்புகளை விரும்பி மோசமாகவே நடந்த புலிகளுக்கு சுமந்திரன் நியாயம் பேசுகிறார்.
அனுராதபுர நகரில் நுழைந்து அப்பாவிச் சிங்கள மக்களை வீதி வீதியாக சுட்டுக்கொன்றது வீரமா? கென் பாம், டொலர் பாம் படுகொலைகள் வீரமா? இதெல்லாம் சுமந்துரனுக்குத் தெரியாதா? மனச்சாட்சியே இல்லையா?
எத்தனை எல்லைக் கிராமங்களில் அப்பாவி சிங்கள இஸ்லாமிய விவசாயிகள் புலிகளால் கொல்லப்பட்டனர். இவை தெரிந்தும் சுமந்திரன் இப்படிப் பேசலாமா?
இந்திய இராணுவத்துடனான மோதல்களை யாழ் வைத்தியசாலையை தளமாக பயன்படுத்தி பல உயிருழப்புகளுக்கு காரணமான புலிகள் மக்களுக்காக போராடினார்களா? வைத்தியசாலை, பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் எதுவென பகுத்தறியாமல் தமது நடவடிக்கைகளை செய்த புலிகளுக்காக சுமந்திரன் பேசுவது எந்த வகையில் நியாயம்?
பூர்வீகமாக வடபகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய தமிழர்களை ஒரே நாளில் சொத்துக்களை சூறையாடிவிட்டு விரட்டிய புலிகள் போராளிகளா? காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புலிகள் நடாத்திய கோர வெறியாட்டம் சுமந்திரன் அறியாதவரா? அப்பேர்ப்பட்ட கொடூரமான கொலைகார கும்பலுக்காக பாராளுமன்றத்தில் சுமந்திரன் பேசுகிறார். இத்தனை அராஜகங்களையும் சுமந்திரன் நியாயம் என்கிறாரா?
சமாதானம் பேசிக்கொண்டே படுகொலைகளை நம்பிக்கைத் துரோகமாக செய்தவர்கள் புலிகள். எந்த வகையிலும் நம்ப முடியாத புலிகளுக்காக பிரபல சட்டத்தரணி சுமந்திரன் பேசுவது அவமானம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுகளை புலிகள் நினைத்திருந்தால் எண்பதுவீதம் குறைத்திருக்கலாம். அந்த படுகொலைகளுக்கு அரசாங்கத்தைவிட புலிகளே பொறுப்பு. இதுவும் சுமந்துரனுக்குத் தெரியும்.
புலிகள் கோலோச்சிய காலத்தில் எங்கே எப்ப குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாது. அவர்கள் இராணுவத்தையும் கொல்வார்கள். பொதுமக்களையும் கொள்வார்கள். அப்படி ஒரு வாழ்க்கை.
பொதுமக்கள் நடமாடும் மத்திய வங்கியை குண்டு வெடிக்க வைத்து அழித்தார்கள். கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கினார்கள். எப்போதுமே மக்களை கேடயமாக்கி தமது வீரத்தை பறைசாற்றிய புலிகள் கோழைகளே. தங்களைக் காக்க மக்களைக் கேடயமாக பயன்படுத்திய புலிகளை சுமந்திரன் அறியாதவர் அல்ல.
நாளைய தேர்தலை எண்ணி இத்தனை தவறுகளையும் கண்டும் காணமல் சுமந்திரன் பேசுவது அவரது சட்டத்தரணித் தொழிலுக்கு அழகல்ல. அவரது கட்சி தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் தங்கதுரை, சரோஜினி யோகேஸ்வரன் போன்றவர்களை கொலை செய்ததும் இதே புலிகளே. இதையும் சுமந்திரன் அறிவார்.
சுமந்திரன் தனது சட்ட அறிவை நியாயத்துக்காக பயன்படுத்த வேண்டும். அநியாயத்துக்காக, அக்கிரமத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது தொழில் தர்மம் அல்ல. மனிதாபிமானமும் அல்ல. இதற்காக சுமந்திரன் வெடகப்படுவார் என நம்புகிறேன். முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றுக்குள் மறைக்க முடியாது. சட்டம் படித்த சுமந்திரனுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை................................
0 comments :
Post a Comment