சிவசக்தி ஆனந்தன் தொடர்பில் ஒருவர் சீஐடி யிடம் முறைப்பாடு மற்றுமொருவர் மான நஷ்ட வழக்காம்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவர்கள் அதற்காக நிதி மற்றும் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததுடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் 30 கோடி பணமும் அமைச்சு பதவியையும் பெற்று மஹிந்த அணியுடன் இணைவதற்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் சரவணபவான், வர்த்தக வாணிப அமைச்சை வேண்டியுள்ளதுடன் உதயன் பத்திரிகையூடாக அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி கருத்து உண்மைக்கு புறம்பானது எனக்கூறும் செல்வம் அடைக்கலநாதன் தான் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கோரி, மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருக்கிறார்.
மானநஷ்ட வழக்கு தொடுப்பது குறித்து தனது சட்டத்தரணிகளோடு கலந்துரையாடி வருகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ள அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தனிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அதனை நிரூபிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் எனது பெயர் குறிப்பிட்டு 30 கோடி பணமும் அமைச்சு பதவியையும் பெற்று மஹிந்த அணியுடன் இணைவதற்கு இருப்பதாக தனது உரையாடல் மூலம் கூறியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரின் குறித்த கருத்து எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவருடைய இக்கருத்தால் நான் மன வேதனை அடைகின்றேன். ஆகவே அவரால் கூறப்பட்ட கருத்தினை விசாரித்து நீதியின் பிரகாரம் அவருக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு முறைப்பாடு செய்கின்றேன், என குறப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment