Wednesday, November 14, 2018

ஐ.தே.கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிக்க மைத்திரி தயார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மறுப்பு.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் இருந்தால், மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அந்த நபரை பிரதமராக நியமிக்க முடியும் என மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையைத் தொடர்ந்தும் நீடிக்கவிடாது தீர்த்துக்கொள்ள உதவுமாறும் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து பிரதமர் பதவியில் சஜித் பிரேமதாச நியமிக்கலாம் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ள போதிலும் தற்போது காணப்படும் நெருக்கடியான சூழ்நிலையில், அதனை எதிர்கொள்ளும் அனுபவமிக்க தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று சஜித் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment