Wednesday, November 28, 2018

நீங்கள் வித்தாக மட்டும் ஆகவில்லை, அவர்களது வீடுத்தோட்டத்தில் காசுமரமாக காய்த்து குலுங்குகிறீர்கள். புதியவன் ராசையா

நீங்கள் வித்தாகவில்லை. களத்திலும் புலத்திலும் பலபேர் சொத்துச் சேர்க்க செத்தே போனீர்கள். உங்களை பெற்றவர்கள் தமிழீழத்தில் பிச்சைகூட எடுக்கிறார்கள். பல பெண்கள் கிணற்றிலே வீழ்ந்து உயிரை மாய்த்தார்கள். கூலிவேலைக்குச் செல்லும் பெண் போராளிகள். கொடுமைக்கு ஆளாகும் இளம் தாய்கள். வறுமையில் படிக்கமுடியாமல் பரிதவிக்கும் குழந்தைகள். வாழ்வே சூனியமாய் போன போராளிக் குடும்பங்கள்.

புலத்திலே மில்லியன் கணக்கிலே பணத்தை மடக்கிய மகான்கள் உங்களை வித்தென்றும் அழியாச் சொத்தென்றும் மேடைகள் கட்டிப் பாடுவதும், நாட்டியம் ஆடி தேசியம் பேசுவதும் பின் கொத்துரொட்டியும் புரியாணியும் வாங்கித் தின்றுவிட்டு, வீடு செல்வதுமே இவர்களது வியாபாரமாக இருக்கிறது.

இறந்தவர்களின் கண்ணீரைக் காசாக்கும் யுக்தி தெரிந்திருக்கிறது இவர்களுக்கு. மரணித்தவர்களின் உறவுகளின் உணர்வுகளை கிளர்த்த புலத்தில் எப்படிக் குளிர்காய்வது என்ற வியாபார தந்திரம் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்ற இயக்கங்கள் போல காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழு அல்ல என்ற இறுமாப்பும், ஒரு சதம் கணக்குக் காட்டத்தவறின் கடும் தண்டனை கொடுக்கும் இயக்கம் என்றும் மார்தட்டிய மக்களே! இன்று பாப்பா, கருணா, கேபி, தனம், ஊத்தை சேது, இமானுவல், இப்படி நீளும் பட்டியலில் உள்ளவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

உங்களைச் சொல்லி அனந்தி சம்பாதிக்கிறார். உங்களைக் காட்டி ஶ்ரீதரன் கொள்ளையடிக்கிறார். உங்களைக் காட்டி கஜேந்திரன் குதிரை ஓட்டுகிறார் ஆனால், பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு நீங்கள் பட்டினியில். மீளாத் துயரில்.

உங்கள் பிள்ளைகள் வித்தாகவில்லை தாய்மாரே. அத்தனைபேரையும் கொன்று தொலைத்துவிட்டு, அவர்கள் வீரத்தில் இவர்கள் விளைச்சலை அறுவடை செய்கிறார்கள்.

ஒரு சமூகம் பாரிய தோல்வியை வரலாற்றில் பதிவு செய்துவிட்டு மார்தட்டி வீரம் பேசுவதை தமிழ்ச் சமூகத்தைத் வேறெங்கும் காண்கிறோமா?

ஏன் தோற்றோம் என்ற ஆய்வில்லை. பிள்ளைகளை அள்ளிக்கொடுத்து இன்று அநாதைகளாக இருக்கும் குடும்பங்கள் எத்தனை யாருக்கும் தெரியாது.

மகனையும் மகளையும் எதிரியிடத்திலும், இயக்க மோதலிலும் பலிகொடுத்த என் தாய்ச் சனமே!

தலைவன் வரும் போது திருப்பிக் கொடுக்கிறேன் என்று உன் பணத்தைச் சுருட்டி சுகபோகம் அனுபவிக்கும் இந்த ஈன இனத்துக்காய் இனிமேலும் உங்கள் செல்வங்களை இழக்காதீர்கள்.

முப்பது வருடம் களத்தில் நின்று போராடியதாக கூறிக்கொள்ளுகின்ற பிரபாகரனுக்கே அஞ்சலி செலுத்தாமல் சுருட்டிய பணத்திற்கு காவலாய் உயிரோடு வைத்திருக்கும் ஒரு முட்டாள் சமூகம் ஒருபோதும் உருப்படாது.

களத்திலே நின்று உணவில்லாமல், உருப்படியான சீருடை இல்லாமல் , வேயிலிலும் மழையிலும் பட்டினியோடும் களைப்போடும் ஆனால் மன உறுதியோடும் போராடி மடிந்த செல்வங்களே
உங்கள் தியாங்களை கனத்த இதயத்தோடு அஞ்சலிக்குறேன்.

இன்று தமிழீழ தேசம் எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி உங்களை மனதிலே ஏந்தி மரியாதை செலுத்தும்.

புதியவன் ராசையா என்பவரது முகப்புத்தகத்திலிருந்து.

No comments:

Post a Comment