மஹிந்தவிற்கு எதிராக பாராளுமன்றில் கை உயர்த்த மாட்டேன்! சம்பந்தனுக்கு நேரடியாக சொன்னார் சிறிதரன்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தன்னால் செயற்பட முடியாது என கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன், மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தபோதே சிறிதரன் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த இரா. சம்பந்தன், ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.
குறித்த சத்தியக் கடதாசியில் 'இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்.' எனக்குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அதில் சகல உறுப்பினர்களும் கையொப்பமிட தயாரானபோது, சிறிதரன் அவ்வாறு நம்பிக்கை இல்லை என கையெழுத்திட முடியாது என சம்பந்தனுடன் முரண்பட்டுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளதுடன் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்று தெரிவித்து மஹிந்தவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனை விதித்தது தவறு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
'நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்.
ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக கதைப்பார்கள்.
சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன்- நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.' என இரா.சம்பந்தன் போட்டுப்பிடித்தார்.
சம்பந்தன் இவ்வாறு பதிலளிப்பார் என எதிர்பாராத சிறிதரன் பெட்டிப்பாம்பாக அடங்கி, ஐயா சொல்கிறார், அதனால் கையொப்பமிடுகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக (மஹிந்தவிற்கு எதிராக) கை உயர்த்த மாட்டேன்' என கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறீதரன் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment