நாளை மீண்டும் பாராளுமன்று கூடுகின்றது. மஹிந்தருக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை நிறைவேறியது.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது எனவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தாங்கள் நாளையும் அதனை தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிக்கையில், சென்வாரம் 26ம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் ஒரு குழப்பமான நிலை இருந்தது. பதவியில் இருந்த பிரதமர் மாற்றப்பட்டார். ஒரு புது நபர் நியமிக்கப்பட்டார். இந்த நடைமுறைகள் அரசியல் சாசனத்திற்கு முரண்பாடாக அமைந்திருந்தது. கொள்கையடிப்படையில் இவற்றையெல்லாம் எதிர்ப்பதென்று எமது கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பிரகாரம் நாங்கள் நீதிமன்றுக்குச் சென்று ஜனநாயகத்திற்கான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 102 பேரும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 14 பேரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 6 பேரும் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment